புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2016

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா வலியுறுத்த வேண்டும்: விக்னேஸ்வரன்

சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா அம்மையார் வலியுறுத்த வேண்டும். போர்க்குற்ற விசாரணை
உரியவாறு பாரபட்சமின்றி நடைபெற்றால்த்தான் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் உருவாகலாம் என்பதை நான் கூறி அம்மையார் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களின் தலைமையின் கீழ், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் மழை நீர் சேகரிக்கும் நீர்த்தாங்கிகளை பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் வேலணையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு முதலமைச்சர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், ‘நடந்து முடிந்தனவற்றிற்குப் பரிகாரம் காணாமல் எமக்கு எவ்வளவுதான் நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் அவை எம்மைத் திருப்திப்படுத்தாது என்பதை அன்புடன் அம்மையாருக்குச் சொல்லி வைக்கின்றேன்.
சமாதானத்துக்கான முன்னுரிமை அச்சுவார்ப்புருவின் (Peace building Matrix) பிரதியொன்று எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் போர்க்குற்ற விசாரணை சம்பந்தமாகவோ அதனை வழிநடத்துதல் சம்பந்தமாகவோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. குதிரைக்குமுன் கரத்தையைப் பூட்டுவது போல் குறித்த ஆவணம் இருக்கின்றது. ஆகவே இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பத்து வருடங்கள் கடமையாற்றிய எம் மதிப்பிற்குரிய சந்திரிக்கா அம்மையார் இந்தக் குறையைத் தீர்க்க வழிவகுக்க வேண்டும்.
சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச வழக்கு நடத்துநர்களை உள்ளேற்க வேண்டும், சர்வதேச போர்க்குற்றங்களை எமது அரசியல் யாப்பின் 13 (6)ம் ஷரத்தின் கீழ் எமது சட்டவாக்கத்துடன் சேர்த்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு செய்து நீதியான, போர்க்குற்ற விசாரணையை உறுதி செய்யாது வெறும் பொருளாதார நன்மைகளை எமது மக்களுக்கு அளிப்பது அவர்களை விலைக்கு வாங்குவதாக அமையும்.
எம் மக்கள் ஆண்டுகள் 2000க்கு மேலான பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். எமது பிரதேசங்களில் பெரும்பான்மையினராக இதுகாறும் வாழ்ந்து வந்தவர்கள். போர்க்குற்றங்கள் யார் இழைத்திருந்தாலும் அவற்றைக் கண்டு பிடித்து நியாயம் வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள் என்பதை மிகத் தாழ்மையுடன் அம்மையாருக்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்’- என்றேன்.

ad

ad