புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2016

முதலமைச்சர், சபாநாயகரின் கூட்டுச்சதியால் எங்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் : ஸ்டாலின்


தமிழக சட்டப்பேரவையில் இன்று (17-08-2016) நடைபெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, திமுக பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்  கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் மேற்கொண்ட “நமக்கு நாமே” பயணம் குறித்து அதிமுக உறுப்பினர் குணசேகர் தரக்குறைவாக பேசி பதிவு செய்தார். எனவே, அதனை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்த சபாநாயகர் தனபால் அவையை தொடர்ந்து நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து அவைக்கு வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான  மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நமக்கு நாமே” பயணம் குறித்து முதல்வர் ஜெயலலிதா அவர்களே அதிமுக பொதுக்குழுவில் பேசியுள்ள நிலையில் சட்டசபையில் அதுகுறித்து பரவலாக பேசுவது பெருமைதான், எனவே அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம், என்று கேட்டு கொண்டார். எனவே, திமுக உறுப்பினர்கள் அமைதியடைந்தனர். ஆகவே பிரச்சினை முடிந்து அவை தொடர்ந்து அமைதியாக நடைபெற்றது.

இந்தநிலையில், திடீரென அவைக் காவலர்களை சட்டசபைக்குள் அழைத்த சபாநாயகர் தனபால் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அனைவரையும் அவைக் காவலர்கள் குண்டு கட்டாக தூக்கிச் சென்று அவையில் இருந்து வெளியேற்றினர்.
 
இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர்  மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி விவரம் :  ‘’சட்டமன்றக் கூட்டத்தொடரை பொறுத்தவரையில் தொடர்ந்து இதுவரையில் நடைபெற்று இருக்கக் கூடிய கவர்னர் உரையாக இருந்தாலும், நிதி நிலை அறிக்கை மீது நடைபெறக் கூடிய விவாதங்களாக இருந்தாலும், அதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களாக இருந்தாலும், அவை அனைத்திலும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து பங்கேற்று, முறையாகப் பேசி எங்கள் கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறோம். விவாதங்களில் முழுமையாக பங்கேற்று இருக்கிறோம். குறிப்பிட்ட சில நேரங்களில், சபாநாயகர் அவர்கள் வழங்கக் கூடிய தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், அதை கண்டிக்கின்ற வகையில், எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில், எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற வகையில் அவையிலிருந்து வெளி நடப்பு செய்து விட்டு, மீண்டும் அவைக்குள் சென்று விவாதத்தில் பங்கெடுத்து வருகிறோம் என்பது இந்த நாட்டுக்கும் தெரியும், அதேபோல ஊடகத்துறையை சார்ந்தவர்களுக்கும் புரியும்.அதுமட்டுமல்ல, நிதியமைச்சரின் பதிலுரை மற்றும் ஒரு சில அமைச்சர்களின் பதிலுரைகளை புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலையில், புறக்கணித்தும் இருக்கிறோம். ஆனால் அவையில் ஆற்ற வேண்டிய பணிகளை நாங்கள் தொடர்ந்து இந்த நிமிடம் வரை செய்திருக்கிறோம் என்பது எங்களது மனசாட்சிக்கு நன்றாக தெரியும். அது உங்களுக்கும் நன்றாக புரியும்.

அவையில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆளுங்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் பெருமக்களும் வேண்டுமென்றே, திட்டமிட்டு, எங்களை எப்படியாவது அவையில் இருந்து வெளியேற்றிட வேண்டும் என்று திட்டமிட்டு, அவைக்கு ஒவ்வாத, அவையில் பேசக் கூடாத, எதைப் பேசினால் எங்களுக்கு கோபம் வரும், ஆத்திரம் வரும் என்பதை அறிந்து, புரிந்து அந்த வகையிலே பேசுகிறபோது, சில வார்த்தைகளை பயன்படுத்தும் போது, அவற்றுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம், சில நேரங்களில் அந்த வார்த்தைகள் திரும்ப பெறப்படும் சூழலும் உருவாகி இருக்கிறது என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை.

நேற்றைய தினம் கூட நமது சபாநாயகர் அவர்கள் வழக்கம்போல, ஏதோ திராவிட முன்னேற்ற கழகம் வெளியில் செல்ல வேண்டும், வெளி நடப்பு செய்ய வேண்டும், சபையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பதாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.

எனவே, இதனை நாங்கள் ஏற்க முடியாத நிலையில் தான் நேற்றைய தினம் நான் தெளிவாகவே எடுத்துச் சொன்னேன், ”6 மணியல்ல 7 மணியல்ல விடிய விடிய இந்த அவையை நடத்தினாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் இங்கு வந்திருக்கிறோம், மதியம் 3 மணி 4 மணி அளவில் கூட சாப்பிடக் கூட செல்லாமல் நாங்கள் இங்கு உட்கார்ந்து இருக்கிறோம். ஆக, எங்களை பொறுத்தவரையில் எதிரி கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்து செயல்படுவோம். சில நேரங்களில் நீங்கள் தரக்கூடிய சில தீர்ப்புகளின் அடிப்படையில் எங்கள் உறுப்பினர்கள் கொஞ்சம் கோபத்தோடு, அல்லது வேகத்தோடு, அல்லது தெரிந்தோ, தெரியாமலோ ஒரு சில வார்த்தைகளை, அதுவும் மைக்கில் கூட அல்ல, சில வார்த்தைகளை சொல்கிற நேரத்தில், அதற்கு கூட சபாநாயகர் வேதனைப்பட்டார், அதற்காக நான் கூட வேதனைப் படுகிறேன். இன்னும் கூட சொல்கிறேன், மன்னிப்பு கேட்கவும் கூட நான் தயாராக இருக்கிறேன்”, என்று நான் நேற்றைக்கு அவையில் பேசி, அவையெல்லாம் கூட இன்றைக்கு பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கிறது. ஆக இந்த நிலையில் நாங்கள் எங்கள் கடமையை ஆற்றிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இன்று நடந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அதிமுகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் பேசுகிற போது, ”நமக்கு நாமே” என்று சொல்லிக் கொண்டு சிலர் ஊர் ஊராக கூக்குரலிட்டு அலைந்தார்கள்”, என்று ஒருமையில் பேசியபோது நானும், துணைத் தலைவர் அவர்களும் அவையில் இல்லை. அப்போது அவர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆக, அந்த சத்தம் கேட்ட பிறகு துணைத்தலைவர் அவர்கள் உள்ளே சென்று, ”இதேபோல ஒவ்வொரு முறையும் தேவையில்லாமல் நடைபெற்று கொண்டு இருக்கிறது, இது தேவையற்றது. ஆகவே, சபாநாயகர் அவர்களே முடிவு செய்து, அதிமுக உறுப்பினர் பேசிய வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினால், அமைதியாக இருக்கும்”, என்று ஒரு மூத்த உறுப்பினர் என்ற முறையில் மிகவும் பணிவோடு, மிகுந்த பெருந்தன்மையோடு சபாநாயகரிடத்தில் கேட்டார். அதற்கு திட்டவட்டமாக சபாநாயகர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் தான் நான் உள்ளே சென்று விவரத்தை அறிந்து கொண்டு பிறகு நானே எழுந்து, ”எங்கள் துணைத் தலைவர் கேட்டதற்கு கூட சபாநாயகர் மறுத்திருக்கிறார். வார்த்தையை நீக்க மாட்டேன் என்று சொல்லி விட்டீர்கள், பரவாயில்லை. ”நமக்கு நாமே” பயணம் நடத்தியதில் எனக்கு பெருமை. அது இந்த அவையில் பரவலாக பேசப்படுவது எனக்கு இன்னும் சிறப்பு. அதுமட்டுமல்ல, இந்த “நமக்கு நாமே” பயணத்தை பற்றி கூட முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அதிமுகவினுடைய பொதுக்குழுவிலே கூட ஒரு கதை சொல்லி இதைப் பற்றி பேசியிருக்கிறார். ஆகவே, அவரது மனதிலே கூட ஆழமாக இது பதிந்திருக்கிறது. ஆகவே இதுகூட எனக்கு மகிஷ்ச்சிதான். எனவே எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களை நான் கேட்டு கொள்ள விரும்புவது, அதைப்பற்றி பேசினால் ஒரு பிரச்சினையும் செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள்”, என்று நான் சொல்லி அந்த பிரச்சினையே முடிந்து விட்டது.

அதன் பிறகு அவை நடவடிக்கையும் தொடங்கியாகி விட்டது. அவை தொடங்கிய பிறகு சபாநாயகரிடத்திலே நிதியமைச்சரோ அல்லது சட்டசபை செயலாளரோ சென்று சொல்லி, நான் பேசியதில், “முதலமைச்சர் அதிமுக பொதுக்குழுவில்”, என்று சொன்னதை நீக்கினார்கள்.

நான் உடனே எழுந்து, “நீக்குங்கள் அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை, அது உங்களுக்கு இருக்கக்கூடிய உரிமை. ஆனால் அதே நேரத்தில் அதிமுக உறுப்பினர் “நமக்கு நாமே” என்று சொன்னதை நீக்குங்கள். அதை நீக்கினால், இதையும் நீக்குங்கள். இல்லை என்றால் அதுவும் இருக்கட்டும், இதுவும் இருக்கட்டும்”, என்றேன். ஆனால் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதன் பிறகு திடீரென்று, இதை விட எவ்வளவோ மோசமான நிலைகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது. நாங்கள் இருந்த இடத்தில் இருந்தே குரல் எழுப்பியபடி இருந்தோம். திடீரென சபாநாயகர் காவலர்களை கூப்பிட்டு, “அத்தனை பேரையும் இங்கிருந்து இழுத்துச் சென்று வெளியில் போடுங்கள்”, என்று உத்தரவு போடுகிறார். அதன் பிறகு எங்களை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வந்து போட்ட காட்சிகளை நீங்களும் பார்த்தீர்கள். இதையெல்லாம் ஊடகங்கள் வெளியிட்டு இந்த ஆட்சியின் அலங்கோலத்தை, சபாநாயகரின் சர்வாதிகாரப் போக்கை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று என்னுடைய பணிவான வேண்டுகோளை எடுத்து வைக்க கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அவையில் இருந்து வெளியில் வந்த பிறகு எங்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதில் இருந்து ஒன்று நன்றாக தெரிய வருகிறது, முதலமைச்சர் இன்றைக்கு கோட்டைக்கு வந்திருக்கிறார், ஆனால் கோட்டைக்கு வந்தவர் அவைக்கு வரவில்லை. ஆக, கோட்டையிலேயே அவரது அறையில் உட்கார்ந்து கொண்டு இதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வாரகாலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறோம். 22-ம் தேதி காவல்துறை மானியம் நடைபெற உள்ளது. ஆக, காவல்துறையின் மானியக் கோரிக்கையில் நாங்கள் பங்கேற்கக் கூடாது என்ற நிலையில் தான், முதலமைச்சர், சபாநாயகர், இங்கிருக்கக் கூடிய அவை முன்னவர் எல்லாரும் கூட்டு சதியாக சேர்ந்து இந்த சதிச் செயலை செய்திருக்கிறார்கள் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.

எங்களை ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் மேற்கொண்டு இதுகுறித்து எங்கள் கட்சியின் தலைவரோடு கலந்து பேசி அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் அறிவிப்போம்.’’

ad

ad