புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

இயக்குனர் சேரன் அண்ணாஅவர்களுக்கு வணக்கம்

இயக்குனர் சேரன் அண்ணாஅவர்களுக்கு வணக்கம்
நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு பங்களிப்பு செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஈழத்தமிழர்கள் சிலர் தமிழ்ப் படங்களை திருடி வெளியிடுவதற்கு முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டியதோடு, அதற்காக ஈழத்தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தியதற்காக அருவருப்பு அடைகின்றேன் என குறிப்பிட்டு பேசியுள்ளீர்கள். உலகம் அறிந்த நீங்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் எதற்கும் எதற்கும் முடிச்சு போடுவது என வரைமுறையற்று திருட்டு படங்கள் வெளியிடுபவர்களையும், விடுதலைக்கான போராட்டத்தையும் தாழ்மைப்படுத்தியுள்ளீர்கள்.
உங்கள் மிகவும் தவறாக கருத்தை திரும்ப பெற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றேன். உங்கள் கருத்தையொட்டி நான் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன்.
நீங்கள் எப்பொழுதாவது தமிழகத்தில் வாழ்வதற்கு அருவருப்பு அடைந்ததுண்டா? காரணம் நீங்கள் குறிப்பிட்டபடியே தமிழகத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைத்து திரைப்பட ஒளிப்பட விற்பனை கடைகளிலும் திருட்டு படங்கள் விற்கப்படுகின்றது. ஆனால் இப்பொழுதெல்லாம் படப்பிடிப்பு நடைபெறும்போதே வெளிவருகின்றதே அதையெல்லாம் யார் வெளியிடுகின்றார்கள்
உலக திரை என இன்று தமிழகம் பேச முக்கிய காரணம் ஈழத்தமிழர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழக திரைத்துறையை இன்று உலகத்தில் சிகரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றவர்கள் ஈழத்தமிழர்கள்.
ஈழத்தமிழர்களால் தமிழக திரைத்துறை இழந்ததை விட பெற்றதே அதிகம் என்பதை நீங்கள் கூட மறுக்க மாட்டீர்கள். நீங்கள் கூறியதை விட பல அருவருப்பான சம்பவங்களை திரைத்துறையினர் புலம்பெயர் நாடெங்கிலும் அறங்கேற்றுகின்றார்கள், ஆனால் அவற்றை பேசுவதனால் அவைகளால் எவ்வித நன்மைகளும் இல்லை.
இன்று தமிழ் சினிமா வரலாற்றில் அதிக செலவில் படமெடுப்பதும், ( அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது வேறு) நடிகர் சங்கத்திற்கு அதிக நன்கொடை கொடுத்தவர்களில் ஒருவர் என அவர்களும் ஈழத்தமிழர்கள்தான்.
அதுமட்டுமல்ல சேரன் அண்ணா அவர்களே புலம்பெயர் நாட்டில் இருந்து அல்லது ஈழத்தில் இருந்து பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என படையெடுத்தார்கள் இவர்களில் ஒருவரையாவது குறிப்பிட்டு இவரை நாங்கள் வளர்த்தெடுத்து அதரவு வழங்கினோம் எனக் கூற முடியுமா? பல ஈழத் தயாரிப்பாளர்கள் பல கோடிகளை தமிழகத்தில் தொலைத்தவர்களாகவே திரும்பியுள்ளார்கள். தமிழ் திரையுலகில் வெற்றி பெற்று திரும்பிய தமிழன் என்று இதுவரை எவரும் இல்லை ஏன் என்ன காரணம், அதற்காக நாங்கள் தமிழகத்தை அல்லது தமிழ் திரையுலகை நினைத்து அருவருப்படைந்தோமா? ஆனால் நாம் புலம்பெயர் நாடு, ஈழம் என வந்த அனைத்து தமிழக திரைத்துறையினரையும் சிறப்பித்தே அனுப்பியுள்ளோம் என்பதை மறுப்பீர்களா?
நீங்கள் போராடியது வீழ்ந்துபோன மாவீரர்களுக்காகவும், விடுதலையை நேசித்த மக்களுக்காகவுமா, அல்லது திருட்டு படங்கள் வெளியிடுபவர்களுக்காகவா?
அதீத இலாபம் பெறும் ஆசையே திருட்டு படங்கள் வெளிவர காரணங்கள். நீங்கள் இனி தமிழகத்தில் வெளியிட்டு சில வாரங்கள் கழித்து புலம்பெயர் நாடுகளில் படங்களை வெளியிடுங்கள் பார்ப்போம், மாட்டீர்கள் ஏன் தெரியுமா அதிக லாபம் வேண்டும் என்ற ஆசைதான். தமிழ் திரைத்துறையின் பேராசைதான் இந்த திருட்டு படங்கள் வெளிவர காரணங்கள் என்பதை மறுக்க முடியுமா?
புலம்பெயர் நாடுகளில் இருந்துதான் திருட்டு படங்கள் வெளிவருகின்றது என்பது உறுதி என்றால், காலம் தாழ்த்தி புலம்பெயர் நாடுகளில் வெளியிடுங்கள் பின்பு எங்கிருந்து திருட்டு படங்கள் வெளிவருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். திருட்டு படங்கள் தடுக்க இதுவே சிறந்த திட்டம் அல்லது தமிழகத்தில் வெளியிட்ட பின்பு புலம்பெயர் நாடுகளில் ஒளித்தட்டிலும், திரையரங்கிலும் வெளியிடுங்கள் யாருக்கு எதில் வேண்டுமோ அதில் பார்க்கட்டும்.
திருடப்படுவதற்கு முன்பே வெளியிட்டால் திருட்டை தடுக்கலாம் அல்லவா. மீண்டும் குறிப்பிடுகின்றேன் அதிக ஆசைதான் இந்த திருட்டு படங்கள் வெளிவர காரணம்.
திருட்டு படங்கள் ஈழத்தமிழர்கள்தான் வெளியிடுகின்றார்கள் என்பதை எந்த ஆதாரத்தில் கூறினீர்கள்., ஆதாரம் இருந்தால் வெளிநாட்டு வாழ் சில தமிழர்கள் என்பதோடு முடித்திருக்கலாம். ஆனால் எமக்காக போராடியதற்காக அருவருப்படைந்ததை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சிந்தியுங்கள் பேசும்முன், ஏனெனில் நீங்கள் ஒரு சிறந்த இயக்குனர்.
நன்றியுடன்
சு.பரமேஸ்வரன்

ad

ad