புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2016

வடக்கில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள் முதல்வர் விக்கி கவலை



வடக்கில் களவு, கொலை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாகாண மட்டத்திலான பொலிஸ், பொது மக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் குற்றச் செயல்கள் மிக அதிகரித்திருப்பது தம்மையும் பொலிஸ் சேவையையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். 

வித்தியாவின் பாலியல் துஸ்பிரயோகம், கொலை ஆகியவற்றின் பின்னர் மாகாண, மாவட்ட, பிரதேச மட்டத்திலான பொலிஸ் பொது மக்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னரே நடவடிக்கைகள் எடுத்திருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் அவை தடைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை காலமும் பயங்கரவாத மனநோக்குடன் தான் பொலிஸ் சேவை வட கிழக்கு மாகாணங்களில் இயங்கியதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், போர்க் காலத்திலிருந்து சமாதான காலத்திற்குத் திரும்பியுள்ளோம் என்ற உணர்வு இப்பொழுதுதான் சிறிது சிறிதாகப் பரவத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இரவு நேரங்களில் பெண்கள் தங்கள் வீடுகளில் தனியே தங்கியிருந்த காலங்கள் போய், வெளியில் சென்று வந்த காலங்கள் போய் இன்று பகல் நேரத்தில் கூட தனியே வீட்டில் இருப்பதற்கோ அல்லது வீதி வழியே செல்வதற்கோ இயலாத ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. 

பொலிஸார் பல கடத்தல் செயற்பாடுகளை முறியடிக்கின்ற போதும், இந்தச் செயற்பாடுகள் தொடர்கின்றன என்றால் இதன் பின்னணி என்ன என்றும் முதலமைச்சர் கேள்வி யெழுப்பி யுள்ளார்.

கடத்தலுக்கும் எமது எல்லைப்புற கடல் காவல் துறையினருக்கும் இடையில் ஏதாவது ஒற்றுமைகள், உடன்பாடுகள் இருக்கின்றனவா என்பது பற்றி எல்லாம் ஆராயப்பட வேண்டியு ள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு, அரசியல்வாதிகளுக்கு இவற்றுடன் சம்மதம் இருக்கின்றதா என்பது ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண நகரத்தின் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் களவுகள் நடைபெறுகின்ற போது பொலிஸார் உடனடியாகச் சமூகம் கொடுக்காமை கூடுதலான சந்தேகங்களையும், பொலிஸ் பொது மக்கள் உறவில் விரிசலையும் ஏற்படுத்துகின்றன. 

எனவே இவை தொடர்பில் நாம் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஆராய்தல் அவசியமாகும். தொலைபேசி முறைப்பாடுகள் அல்லது நேரடி முறைப்பாடுகள் கிடைத்து குறிப்பிட்ட நேர காலத்தினுள் நடவடிக்கைகளில் இறங்காத பொலிசார் சம்பந்தமாக உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

மேலும் காலத்துக்கு காலம்,பொதுமக்களை பயப்பீதியில் உறைய வைக்கும் பல அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. யுத்த கால இராணுவ ரோந்துகள், விசாரணைக்கான அழைப்புகள், விசேட தேடுதல்கள், புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் போன்றவை சற்று குறைந்த நிலையில் புதிதாக முளைத்தது கிறீஸ் பூதம்.

அதனைத் தொடர்ந்து வடக்கு இளைஞர்களின் குழுக்களுக்கிடையேயான வீதி மோதல், வாள் வெட்டு போன்ற அட்டகாசங்கள் நடைபெற்றன. 

அதே போன்று போதைப்பொருட் பாவனை பாலியல் துஸ்பிரயோகங்கள், சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகள், களவுகள், கொலை, கொள்ளை போன்றவை நடைபெறத் தொடங்கின. 

அதேநேரத்தில் மண் கடத்தல், மரக் கடத்தல், வளங்களைச் சூறையாடுதல் போன்ற குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட வடமாகாண முதலமைச்சர், 

போர்க்கால அதிர்ச்சிகள் ஏற்படுத்திய மனோ நிலைப் பாதிப்புக்கள் இவற்றின் பின்னணியில் இருக்கின்றனவா என்பது ஆராயப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

ad

ad