புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2016

இலங்கை தொடர்பான முழுமையான எழுத்து மூல அறிக்கை வெளியாகவுள்ளது

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 33வது கூட்டத் தொடர் நாளை 13ம் திகதி செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

இம்மாதம் 30 ம் திகதி வரை நடைபெறவுள்ள 33வது கூட்டத் தொடரில் இலங்கையின் விவகாரம் எதுவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக் கப்படவில்லையென்ற போதும் இலங்கை தொடர்பில் நாடுகள் கருத்துக்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.நா.மனித உரிமை பேரவையின் 33வது கூட்டத் தொடரில் ஜெனிவாவில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் உயர்ஸ்தானிகர் ரவிநாத ஆரியசிங்க தலைமையில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கையிலிருந்து அமைச்சர்கள் மட்ட குழுவினர் கலந்து கொள்ளவில்லை.இதேவேளை இம்முறை இலங்கையின் சார்பில் ஜெனிவாவுக்கான தூதுவர் உரையாற்றலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் அரசாங்கம் செயற்படுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து விளக்கமளி்கப்படலாம் .
குறிப்பாக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்படுவார்களா? இல்லையா? என்பது தொடர்பாகவும் அரசாங்கம் மனித உரிமை பேரவைக்கு எடுத்துரைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
காரணம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விசாரணை பொறிமுறையில் சர்வதேச தரம் இடம்பெற வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நாளை இடம்பெறும் ஆரம்ப அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் உரையாற்றவுள்ளதுடன் உறுப்பு நாடுகள் தொடர்பான அறிக்கையையும் வெளியிடவிருக்கின்றார்.
அடுத்தவருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான முழுமையான எழுத்து மூல அறிக்கையை செயிட் அல் ஹூசைன் வெளியிடவிருக்கின்றார்.
அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கமும் நல்லிணக்க பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறலின் இறுதி வடிவம் என்பன தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள 34வது கூட்டத் தொடரில் விபரமான பரந்துபட்ட அறிக்கையை முன்வைக்கவுள்ளது.
குறிப்பாக அரசாங்கமானது பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை விடயத்தில் அரசாங்கம் தற்போது மக்களின் கருத்தறியும் செயற்பாட்டை நிறைவு செய்திருக்கிறது.
நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான கலந்துரையாடல்களையும் ஆலோசனைகளையும் அரசாங்கம் நடத்தியிருந்தது.
முதலாவது கட்டமாக தற்போது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனையடுத்து இம்மாதம் இறுதிப்பகுதியில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படவுள்ளது. தென்னாபிரிக்காவில் செயற்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவைப் போன்றதான ஒரு ஆணைக்குழுவே இலங்கையின் நிலைமைகளுக்கு ஏற்ப நிறுவப்படுமென அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
அடுத்ததாக மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாடும் இடம்பெறவுள்ளது.
மேலும் மீள்நிகழாமை தொடர்பான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. இறுதியாக புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த செயற்பாடுகள் அனைத்தையும் முன்னெடுத்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆகும் போது பொறுப்புக்கூறலின் இறுதிவடிவம் தயாரிக்கப்பட்டு மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் செயற்குழுவானது முன்வைத்துள்ள பரிந்துரைகளை மிகவும் விரிவாக ஆராய்ந்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் செயற்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் மிகவும் விரிவான முறையில் ஆய்வு செய்து வருகிறது.
இது தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக செயற்குழுவிற்கு எமது விடயங்களை அறிவிப்போம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் செயற்குழு சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர்கள் பொறிமுறையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad