புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2016

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரும் அணி திரள்க. வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் அறை கூவல்!


தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம், தனித்துவமான
இறைமை, சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும். உலகின் கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி! செப்ரெம்பர் 24, 2016 (சனிக்கிழமை) அன்று கல்வியங்காடு, திருநெல்வேலி, கச்சேரி ஆகிய இடங்களிலிருந்து யாழ் முற்றவெளி நோக்கிய எழுச்சிப் பேரணியானது அணி அணியாக அலை கடலென திரள வேண்டும்.
வடக்கு கிழக்கு எங்கும் சிங்கள குடியேற்றங்கள்!
நாவற்குழியில், முருங்கனில், வவுனியாவில், முல்லைத்தீவில் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
திரும்பும் இடமெல்லாம் பெளத்த விகாரைகள்
2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோணேசர் கோவில் முன்பாக புத்தர் சிலை. 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கேதீச்சரத்தின் முன்னால் பெளத்த விகாரை. சைவ மக்களின் புனித தீர்த்தமான கன்னியா வெந்நீரூற்றில் பெளத்த விகாரை. சாம்பல் தீவில் பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை. கொக்கிளாயில் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பெளத்த விகாரை. முல்லைத்தீவின் ஏனைய ஒன்பது இடங்களில் பெளத்த விகாரைகள். ஓமந்தை சேமமடுவில், கனகராஜன் குளத்தில், மாங்குளத்தில், கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் அருகில், பரந்தனில், பூநகரியில், மாதகலில் என புதிய புதிய பெளத்த விகாரைகள்.
இப்பொழுது பழம் பெருமை வாய்ந்த நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் அருகில் 67 அடி உயர புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள். வேலணையில், மண்டைதீவில், புங்குடுதீவில் புத்தர் சிலைகள். எங்கள் நிலத்தை முற்று முழுதாக சிங்கள பெளத்த மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் சிறீ லங்கா அரசின் முயற்சியை நாம் அனைவரும் இணைந்து முறியடிக்க! தமிழ் மண்ணை, தமிழ் மொழியை, எமது மதங்களை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, எமது பொருளாதாரத்தை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழன் என்ற தனித்துவத்தை காத்திட செப்ரெம்பர் 24 இல் யாழ் முற்றவெளியை நோக்கி அணி திரள்வோம்.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று அதன் தனித்துவத்தை அழிக்கும் வேலைத்திட்டங்களில் பங்கேற்று பாதுகாப்பளிக்கும் சிங்கள பெளத்த அரச ஆயுதப் படைகள் எமது மண்ணிலிருந்து அகற்றப்படல் வேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக எமது சொந்த வாழ்விடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கில் விரட்டப்பட்ட நாங்கள் நடுத்தெருவில் நிற்க எமது பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அரச படைகள் வெளியேறி எமது மக்கள் மீளக் குடியேற ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இறுதி யுத்தத்தின் போதும், அதற்கு முன்னரும் பின்னரும், கடத்தப்பட்ட, சரணடைந்த பின்பு காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொரு தமிழ் மகனும், மகளும் எங்கிருக்கின்றார்கள் அல்லது என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறியப்பட்டு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி உடன் விடுவிக்கப்படல் வேண்டும். யுத்தக் குற்றங்கள், இன அழிப்புத் தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தப்படல் வேண்டும். இவையெல்லாம் மீண்டும் ஏற்படா வண்ணம், தமிழ் மக்கள் பேரவையாலும் வட மாகாணசபையாலும் தயாரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வுத் திட்டத்தின் பிரகாரம், இணைந்த வடக்கு கிழக்கில், தமிழர் தேசம், அதன் தனித்துவமான இறைமை, சுய நிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.
மேலே முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழ் மக்களின் பேரம் பேசும் ஆற்றலை வலுப்படுத்தி இவையனைத்தையும் நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்தினை நிர்ப்பந்திக்கவும், ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவைக்குத் தெளிவுபடுத்தவும், இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தவும். இதுதான் தருணம்! எனவே நடை பெறவிருக்கும் பேரணியில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றி

ad

ad