புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2016

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: வெற்றியை தொடரும் உத்வேகத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரை சூப்பர் ஜெயன்ட்சுடன் இன்று மோதல்


தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் வெற்றியை தொடரும் உத்வேகத்தில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இன்று மதுரை
சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதுகிறது.
20 ஓவர் கிரிக்கெட்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னை, நெல்லை, திண்டுக்கல் நத்தம் ஆகிய மூன்று இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. களம் குதித்துள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
மொத்தமுள்ள 28 லீக் ஆட்டங்களில் 20 ஆட்டங்கள் முடிந்து விட்டன. ஆனாலும் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை உறுதி செய்யவில்லை. அந்த அளவுக்கு நீயா–நானா? என்று கடுமையான குடுமிபிடி நிலவுகிறது.
அசத்தும் கில்லீஸ்
இந்த நிலையில் நத்தத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகலில் நடைபெறும் 21–வது லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், மதுரை சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. முந்தைய பரபரப்பான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை புரட்டி போட்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது.
திண்டுக்கல்லின் வெற்றிப்பயணத்துக்கு ‘வேட்டு’ வைத்ததில் முக்கிய பங்கு வகித்த கில்லீஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் கோபிநாத்தும், தலைவன் சற்குணமும் அரைசதம் அடித்து அமர்க்களப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் திரட்டி சாதனை படைத்தனர்.
இதுவரை 5 ஆட்டங்களில் 3–ல் வெற்றி கண்டுள்ள ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் அதே அதிரடி வேகத்தை இன்றைய ஆட்டத்திலும் தொடருவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதிலும் வெற்றி பெற்றால் அரைஇறுதி வாய்ப்பை நெருங்கி விடலாம். பேட்டிங்குக்கு சாதகமான நத்தம் ஆடுகளத்தில், சேப்பாக் கில்லீஸ் அணி விளையாடிய 2 ஆட்டங்களில் ரன்மழை பொழிந்து வெற்றி பெற்றது. அதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் நிச்சயம் கூடுதல் நம்பிக்கையை பெற்றிருப்பார்கள்.
பரிதாபத்தில் மதுரை அணி
அதே சமயம் நடப்பு தொடரில் வெற்றி பக்கமே செல்லாத ஒரே அணியான மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் தொடர்ந்து உதை மேல் உதை வாங்கி வருகிறது. இதுவரை 5 தோல்வி அடைந்துள்ள மதுரை அணி, ‘இனி இழப்பதற்கு எதுவும் இல்லை’ என்ற நினைப்புடன் சகட்டுமேனிக்கு ஆட முயற்சிப்பார்கள். இந்த வகையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாடுவது அவசியமாகும்.
மதுரை கேப்டன் ஷிஜித் சந்திரன் கூறுகையில், ‘இந்த தொடரில் எங்களது ஆட்டம் சீராக இல்லை. பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று நீண்ட நேரம் ஆடாமல் விக்கெட்டை சீக்கிரம் இழந்து விடுகிறார்கள். முன்னணி வீரர்கள் பெரிய அளவில் பார்மில் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. மேலும் எங்கள் அணியில் மாவட்ட அளவிலான வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு போதிய அனுபவம் கிடையாது. எஞ்சிய ஆட்டங்களில் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முயற்சிப்போம். அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டாலும், அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றிக்காக போராடுவோம்’ என்றார்.
வீரர்கள் விவரம்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத், தலைவன் சற்குணம், வசந்த் சரவணன், சதீஷ் (கேப்டன்), கவ்ஜித் சுபாஷ், சசிதேவ், அந்தோணி தாஸ், யோ மகேஷ், அலெக்சாண்டர், சாய் கிஷோர், தமிழ்குமரன்.
மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ்: தியாகராஜன், அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் (கேப்டன்), சுரேஷ்குமார், பிரான்சிஸ், சக்தி, எல்.விக்னேஷ், பாப்னா, முருகானந்தம், சந்திரசேகர், எட்வர்ட் கென்னடி.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, எச்.டி., விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
மற்றொரு ஆட்டத்தில் திருவள்ளூர்–கோவை சந்திப்பு
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 6.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்சும், கோவை கிங்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்துவதில் இவ்விரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான ஆட்டமாகும்.

ad

ad