புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2016

கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி ?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக
வெளியான தகவல் தொடர்பில் 1வாரத்திற்குள் ஆராய்ந்து பதிலளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உப்பளம் அமைப்பதற்கென கடந்த 2014ஆம் ஆண்டு வடமாகாண காணி அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கேரதீவு பகுதியில் உப்பளம் அமைப்பதற்கு வடமாகாண காணி அமைச்சு 2014ஆம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் அது தொடர்பாக உங்களுக்கு எதுவும் தெரியாது எனறு கூறுகின்றீர்கள். இதில் எது உண்மை என்று முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அனுமதி வழங்கப்பட்டமை குறித்து  ஞாபகம் இல்லை எனவும் இந்த விடயம் குறித்து 1 வாரத்திற்குள்பதில் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விடயம் குறித்து அங்கு கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன்,
கேரதீவு பகுதியில் உப்பளம் அமைக்கப்படுவதை மீனவர்களும், விவசாயிகளும் எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆராய்ந்ததில் பிழைகள் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வதற்காக சுற்றாடல் அதிகாரசபையைக் கேட்டுள்ளோம்.
இந்த விடயத்தில் சூழலுக்கு பாதிப்பு உள்ளதாக அறிந்தால் அதனை நாங்களும் எதிர்ப்போம் என தெரிவித்தார்.
இதனிடையே அங்கு கருத்து வெளியிட்ட சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள்,
கடந்த 3 வருடங்களுக்கு முன்னர்

குறித்த உப்பள அதிகாரிகள் தம்மிடம் அனுமதி கோரியதாகவும், அதற்கமைய கேரதீவு வீதியில் 15 – 16ஆம் கிலோ மீற்றர்களுக்கிடையில் அதனை அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும்,
ஆனால் அவர்கள் 12 – 13 ஆம் கிலோ மீற்றர்களுக்கிடையில் அமைத்தமை ஊடாக சுற்றாடல் அதிகாரசபை அனுமதியை மீறியுள்ளதாகவும் அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் அடுத்த வாரம் தீர்த்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad