புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2016


நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட காவிரி உரிமை மீட்புப் பேரணியில், திருவாரூரைச் சேர்ந்த
விக்னேஷ் பாண்டியன் என்பவர் நேற்று தீக்குளித்தார். படுகாயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசுப் பொது மருத்துவமனையின் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல் இன்று காலை அவர் பரிதாமாக உயிரிழந்தார். விக்னேஷ் பாண்டியன், நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்புலன்ஸ் முன் மறியல்!

விக்னேஷ் பாண்டியனின் இறுதிச்சடங்குக்காக அவரது உடல், சொந்த ஊரான திருவாரூருக்குக் கொண்டு செல்லப்படுவதாக இருந்தது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர், ‘‘முதலில் எங்கள் அலுவலகத்துக்கு உடலைக் கொண்டுசென்று வீரவணக்கம் செய்யவேண்டும். அதன்பின், நாளை திருவாரூரில் இறுதிச்சடங்கு செய்யப்படும்’’ என்று அறிவித்தனர். ஆனால், அதற்கு போலீஸ் அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். அதனால் கோபம்கொண்ட நாம் தமிழர் கட்சியினர், உடலை எடுத்துச்செல்லவிடாமல் ஆம்புலன்ஸின் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் காவல் துறை அதிகாரிகளுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி!
அதன்பின் அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ‘‘எனது கட்சிக்காரனை, என் இனப் பிள்ளையை, என் இனத்தின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்துள்ள விக்னேஷ் பாண்டியன் உடலுக்கு கட்சி அலுவலகத்தில்வைத்து வீரவணக்கம் செலுத்திய பின்பே திருவாரூர் அனுப்பிவைக்கப்படும்’’ என்றார். ஆனால், மேலிடத்தில் இருந்து எந்த உத்தரவும் வராததால் காவல் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம்கொண்ட நாம் தமிழர் கட்சியினர், ஆம்புலன்ஸில் இருந்த விக்னேஷ் பாண்டியன் உடலை வெளியே கொண்டுவர முயற்சி செய்தனர். ஆம்புலன்ஸையும் நகரவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் பிரச்னை தீவிரமடைந்தது.
கமிஷனரிடம் சீமான் கோரிக்கை!
தகவல் அறிந்த சென்னை கூடுதல் கமிஷனர் சங்கர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் சீமான், ‘‘இன்று இரவு 10 மணிவரைக்கும் வீரவணக்கம் செலுத்துவதற்காகவும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகவும் என் கட்சி அலுவலகத்துக்கு அவரது உடலைக் கொண்டுசெல்ல அனுமதி வேண்டும். அதன்பின் அவரது உடலை, திருவாரூருக்குக் கொண்டு செல்லலாம். இதற்கு காவல் துறை அனுமதி அளிக்காவிட்டால் இங்கிருந்து யாரும் நகரமாட்டோம்’’ என்றார்.
கூடுதல் கமிஷனர் சங்கர், ‘‘அமைதியான முறையிலும், எந்தவிதப் பிரச்னையிலும் ஈடுபடாமல் இருந்தால் அனுமதி அளிக்கப்படும்’’ என்றார். இதற்கு ஒப்புக்கொண்ட நாம் தமிழர் கட்சியினர் விக்னேஷ் பாண்டியனின் உடலை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
விக்னேஷ் பாண்டியனின் சொந்த ஊரான திருவாரூரில், அவரது உடல் நாளை காலை 11 மணியளவில் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.

ad

ad