புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2016

சமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியும

இன்றைய நாட்களில் கணணிகளின் இராஜாங்கமே கோலோச்சுகின்றது.

எதிலும் கணனி எங்கும் கணனி எதற்கும் கணனி என்றாகி விட்ட நிலையில், கணனி அறிவுள்ளவர்கள்தான் நல்ல தொழில் வாய்ப்பைப் பெறலாம் என்ற நிலை உருவாகி விட்டது.

அதிலும் முகநூல் ஆரம்பித்த பின்னர் கணனிக்குள்  மணிக்கணக்காக முகத்தைப் புதைப்பவர்கள் இன்று பல்கிப் பெருகி விட்டார்கள். அதுபோல குறுஞ்செய்திகளை அனுப்பி விட்டு அவற்றின் பதிலுக்காக அடிக்கடி தமது கைத்தொலைபேசிகளை வருடிக் கொண்டிருப்பவர்களும்  எண்ணிக்கையில் அதிகரித்து விட்டார்கள்.
இதை அதிசயிக்கத்தக்க தொழில் நுட்ப வளர்ச்சி என்பதா அல்லது  அநியாயமாக இளவட்டங்களை அழிக்கின்ற ஒன்று என்பதா?

முகவலை போன்ற சமூக வலைகள் இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டு விட்ட நிலையில், முகத்தை முகம் பார்ப்பது என்பது அருகிக் கொண்டே போவதுதான் நிஜம்.

முகத்தை முகம் பார்த்து சுக விசாரிப்புகள் செய்வது, புதினங்கள் பகிர்ந்து கொள்வது, சகஜமாக உரையாடுவது  போன்றவற்றையெல்லாம் அடியோடு தொலைத்து விடுவோமா என்ற பயப்பிராந்தி எழுந்துள்ளது.

நமது நிஜ முகங்கள் தொலைந்து போகின்ற அவலமே எஞ்சிக் கிடக்கின்றது. 

பிறரோடு பேசிப் பழகுவதைத் தவிர்த்து, உள்ளங்கைக்குள் இருக்கும் கையடக்கத் தொலைபேசியுடனான உறவை நெருக்கமாக்கி, தனக்குள் சிரித்து, புன்முறுவல் செய்து, தனி உலகில் வாழ முனைகின்ற  கோலம் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றது. அதாவது உள்ளங்கை உலகம் பல இளவட்டங்களின் உலகமாக மாறிக் கொண்டிருக்கின்றது. 

இது  ஓர் ஆரோக்கியமான வளர்ச்சியா?
ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவது எடை அதிகரிப்பிற்கு பெரிதும் கைகொடுக்கின்றது. தொழில்நுட்ப மோகம், எதையுமே உடம்பை வளைக்காமல் செய்ய உதவுவதால், உடற்பயிற்சி அற்ற உடம்பு  நலம் கெட்டுப் போகின்றது. ஒரு சிலருக்கு உடல் எடையை அதிகம் இழக்கவும் வழிவகுத்துக் கொடுக்கின்றது.

எதையாவது உண்ணும்போது அதை ரசித்து உண்ணுவது தவிர்க்கப்பட்டு, தன் புலன்கள் கணனியில் இருக்க, இயந்திரத்தனமாய் வாய்க்குள் உணவைத் தள்ளும் கேவலமும் அரங்கேறுகின்றது.

கண்களுக்கு தொடர்ந்து வேலை கொடுப்பது, தலைவேதனையும் சிலருக்குக் கொண்டுவருகின்றது. கூடவே கழுத்து வலியும் கைகோர்த்துக் கொள்வது வழமை. கண்களும் அழுத்தம் காரணமாக செந்நிறமடைகின்றன.

கணனிக் காய்ச்சலோ அல்லது கைத்தொலைபேசிக் காய்ச்சலோ ஒருவருக்குத் தொற்றி விட்டால்,  வேறு விடயங்களில் மனம் ஈடுபட முரண்டுபிடிக்கும். ஐயோ இது வேண்டாம் என்று ஏனையவற்றை ஒதுக்க முற்படும் மனோபாவம் மேலிடும். 

எங்கள் நிஜ உறவுகளை, நண்பர்களைத் தொலைத்து விட்டு, ஒரு மாய உலகில் நண்பாகளுக்காக அலைந்து கொண்டிருப்பதே இன்றைய யதார்த்தமாகி இருக்கின்றது. முகநூலில் பல நூறு நண்பர்கள் இருப்பதாகப் பீற்றிக் கொள்கிறோம். அவா்களில் எவராவது நாம் பதிவேற்றியதை லைக் செய்து இரண்டு வரி பாராட்டி எழுதி விட்டால்  தலைகால் தெரியாமல் குதிக்கின்றோம். 

இந்த முகந்தெரியாத உறவுகள் பல்கிப் பெருக வேண்டும்.  ஆயிரக்கணக்கில் இருக்க வேண்டும் என்பதைக் குறியாகக் கொண்டு; நம்மைச் சுற்றியிருக்கும் இளம் சந்ததியினர் ஏராளம் ஏராளம். முகம் தெரிந்த உறவுகள் பலவற்றை இழந்;துவிட்டு முகந்தெரியாத உறவுகளின் வருகையைக் கொண்டாடுகிற சமுதாயம் இது. 

உலக நாடுகளைப் போல், இலங்கையின் இணையப் பாவனையாளர்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறார்கள். 2000மாவது ஆண்டில்  இலங்கை சனத்தொகையின் 0.5 வீதமானவர்களே இணையப் பாவனையாளராக இருந்துள்ளார்கள். இந்தத் தொகை 2010இல் 8.3 வீதமாக உயர்ந்தது. ஆனால் இந்த ஆண்டு நடுப்பகுதி வரை எடுத்த கணிப்பின்படி இலங்கை மொத்த சனத்தொகையான 6,087,164 இல் 27.4 வீதமானவர்கள் இணையப் பாவனையாளர்கள்

கணிசமான வளர்ச்சி....

கைத்தொலைபேசி பாவனைகளும், இணையத்துடனான இணைப்புகளும், முகநூல் மேய்ச்சல்களும் கூடவே சேர்ந்து கொண்டிருப்பது அபரித வளர்ச்சி.

இந்த வருடம் கடந்த மார்ச் மாத முடிவில் எடுத்த கணிப்பொன்றின்படி,1.65 பில்லியன் தீவிர முகநூல் பாவனையாளர்கள், மாதாந்தம் இணையத்திற்கு வந்து போகின்றார்களாம். 

முகநூலை நேசிக்கும் அளவிற்கு இங்குள்ள நூலகங்களை எத்தனை பேர் நேசிக்கின்றார்கள்? அங்கும் குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருக்கும் வாசகர் கூட்டங்களை அல்லவா காணமுடிகின்றது?

பத்திரிகை வாசிப்பதற்காக அடிக்கடி நூலகம் செல்லும் எனக்கு, மேசையில் ஒரு  பத்திரிகையை    விரித்து  வைத்துவிட்டு தன் கைத்தொலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்தபோது கோபம் வரவில்லை. இந்த இளஞ்சமுதாயத்தை இந்த நவீன மின்னியல் சாதனங்கள் இப்படி மாற்றியமைத்து விட்டனவே என்று கவலைப்பட்டேன்.

மாறி விட்டதா இளஞ்சமுதாயம்? அல்லது மாற்றப்பட்டு விட்டதா இந்தச் சமுதாயம்?

வளருகின்ற தொழில் நுட்பங்கள், வளர வேண்டிய இளசுகளின் மூளைத்திறனை மழுங்கடிக்க வைக்கின்றனவா?

நீங்களே நீதிபதிகள்.....

ad

ad