புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2016

அப்போலோ மருத்துவமனையும் அரசியல் சரித்திரமும்...

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, போயஸ் கார்டன் வேதா நிலையம், அறிவாலயம்..இந்தத் தளங்கள்
எல்லாம் தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் ராஜாங்கக் களங்கள். இதே அளவிற்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அன்றும் இன்றும் விளங்கி வருவது அப்போலோ மருத்துவமனை.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் அரசியல் தலைவர்கள், அப்போலோவில் அட்மிட் ஆவார்கள். அதையொட்டி, அகில இந்திய அரசியல் மட்டுமல்ல.. தமிழக அரசியலும் தலைகீழாக மாறும். அப்படிப்பட்ட சில நினைவுகள்...
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் சகாப்தத்தில் இருந்துதான் தொடங்கியது. 1983 அக்டோபரில் தொடங்கப்பட்ட அப்போலோ  மருத்துவமனையில், 1984 அக்டோபர் 5-ம் தேதி, எம்.ஜி.ஆர் சேர்க்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றி, மருத்துவமனை நிர்வாகம் சரியான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அதில், “எம்.ஜி.ஆருக்கு சளித் தொந்தரவு இருந்தது. அதனால், காய்ச்சல் ஏற்பட்டது. ஆஸ்துமா தொந்தரவும் அவருக்கு இருக்கிறது. அதற்கு சிகிச்சை எடுக்க இங்கு சேர்ந்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்திகளை நாளிதழ்கள் மூலம் அறிந்து கொண்ட, தொண்டர்களும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். அரசியலில் எம்.ஜி.ஆரின் எதிரிகள் வேகவேகமாக காய்களை நகர்த்திக் கொண்டிருந்தனர். தொண்டர்களிடம் ஏற்பட்ட சோர்வு... எதிரிகளுக்கு ஏற்பட்ட உற்சாகம் என அனைத்தையும் கருத்தில் கொண்ட, ஆர்.எம்.வீரப்பன், ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் உடல்நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். தமிழக அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “முதலமைச்சரின் உடல்நலம் தொடர்ந்து முன்னேறி வருகிறது” என்று ஸ்டீரியோ டைப்பில் இருந்தது. இதேநிலை நீடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அக்டோபர் 14-ம் தேதி, அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “எம்.ஜி.ஆரின் மூளையில், ஒரு இடத்தில் ரத்தம் உறைந்துள்ளது” என்று அறிவித்தது. தகவலறிந்த பிரதமர் இந்திரா காந்தி, “எம்.ஜி.ஆருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு உதவும்” என்று கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 16-ம் தேதி எம்.ஜி.ஆரைப் பார்க்க சென்னை வந்தார். பிரதமர் ஆலோசனைப்படி எம்.ஜி.ஆர் அப்போலோவில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது அவரை பார்க்க திரையுலகப் பிரமுகர்கள் வரிசைகட்டி வந்தனர். அன்றைய அமைச்சர்கள் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள், சட்டசபை நேரம் போக, மீதமிருந்த அத்தனை பொழுதுகளையும் அப்போலோவில் கழித்தனர்.
எம்.ஜி.ஆர் அப்போலோ மருத்துவமனையில் இருந்த 10 நாட்களுக்கும் மேலாக க்ரீம்ஸ் ரோட்டில் அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்திருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் அவரது தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனை அருகில் காத்துக்கிடந்தனர். அப்போது சட்டசபை நடந்து கொண்டிருந்த தால், தினந்தோறும் சட்டசபையில் எம்.ஜி.ஆர் உடல் நிலை குறித்து தகவல் சொல்லப்பட்டது. இந்த தகவல்களால் ஓரளவுக்கு தமிழகத்தில் அப்போது பதற்றம் குறைந்திருந்தது.

ரங்கராஜன் குமாரமங்கலம்

ரங்கராஜன் குமாரமங்கலம், காங்கிரஸ் கட்சியிலும் பிறகு பாரதிய ஜனதாவிலும் இருந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ரங்கராஜன் குமாரமங்கலம் சட்டத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு, பாரதிய ஜனதா ஆட்சி அமைத்து, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய மின்துறை அமைச்சராக இருந்தார். இவர், கடந்த 2000-வது ஆண்டில், சாதரண காய்ச்சல் என்று அப்போலோவில் ‘அட்மிட்’  ஆனார். அதன்பிறகு, காய்ச்சல் குணமடைந்து டெல்லி சென்றவர், கோமா நிலைக்குப் போனார். அவருடைய உடலில் பல உறுப்புகள் செயலிழந்தன. இதையடுத்து, அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை மீது ரங்கராஜன் குமாரமங்கலம் குடும்பத்தினர் ஒரு விமர்சனத்தை வைத்தனர். அதன்பிறகு, காலஓட்டத்தில் அந்த விவகாரம் மெல்ல மறைந்துவிட்டது. ஆனால், ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அப்போல்லோ மருத்துவமனை சிகிச்சையும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகளும் அரசியலில் பரபரப்பைக் கிளப்பின.
முரசொலி மாறன்...

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், கடந்த 2002-ம் ஆண்டு, இறுதியில் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்றார். குணமடைந்து, டெல்லி சென்ற அவருக்கு, 2003-ம் ஆண்டு மீண்டும் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனே, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு உடல்நிலை சீரடையவில்லை. இதற்கிடையில், முரசொலிமாறனின் உடல்நிலை குறித்து பேசிய தி.மு.க தலைவர் கருணாநிதி, அப்போல்லோ மருத்துவமனை மீது ஒரு விமர்சனம் வைத்தார். இந்நிலையில் முரசொலிமாறன், டெல்லியில் இருந்து, 2003 நவம்பர் 14-ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில், ஹூஸ்டன் நகரில் இருக்கும் மெத்தோடிஸ்ட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 10 மாதங்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை கொடுத்தும், உடல்நிலை சரியாகவில்லை. அதன்பிறகு, இந்தியா அழைத்து வரப்பட்டார்.  மீண்டும் அவரை அப்போல்லோ மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் கோமாவில் இருந்த மாறனை பிரதமர் வாஜ்பாய் 2003 செப்டம்பர் 13-ம் தேதி வந்து பார்த்தார்.  மத்திய அமைச்சர்கள் எல்லாம் அப்போலோவுக்கு வந்தனர். கருணாநிதி தினமும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முரசொலிமாறனைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைத் தொடங்குவார். அதே வருடம் நவம்பர் 23&ம் தேதியன்று மாறன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
கருணாநிதி

கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருக்கு அடிக்கடி முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்து வந்தன. இதனால் 2008-ம் ஆண்டிலேயே போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பி இருந்தார். பின்னர், 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் மே 3-ம் தேதி திடீரென மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து சில நாட்களில் வீடு திரும்பினார்.
இதன் பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி இரவு கருணாநிதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத் தொற்று இருப்பதால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தது. இதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் 22-ம் தேதி இரவு வீடு திரும்பினார். அவரை அவரது மனைவி ராஜாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் உடன் இருந்து கவனித்துக்கொண்டனர்.
ஜெயலலிதா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், தற்போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சலும் உடல்சோர்வும் ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை கொடுக்கப்படுகிறது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசியலில் என்னென்ன பரபரப்புகள் நிகழப்போகின்றன என்பதற்கு எதிர்வரும் நாட்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

ad

ad