புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2016

கேபினட்டில் 'விவாதிக்கப்பட்ட' 3 விஷயங்கள்! -ஆச்சரியப்படுத்திய ஓ.பி.எஸ்

முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் கூடும் அமைச்சரவைக் கூட்டம் எ
ன்பதால், எந்த விவாதமும் இல்லாமல் அமைச்சர்கள் கூடிக் கலைந்தனர். ' பத்திரப் பதிவு, உணவு, உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் தொடர்பாகவே கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாக குறிப்பிடும் வகையில் எதுவும் பேசப்படவில்லை' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 26 நாட்களுக்கும் மேலாக, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுவரையில், 'முதல்வரின் துறைகளை ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்' என பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் பணிகளைக் கவனித்து வருகிறார் ஓ.பி.எஸ். காவிரி விவகாரம், உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் கூடி முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணி வரையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கேபினட் கூட்டம் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு கூட்டத்தை வழிநடத்தினார் ஓ.பி.எஸ்.
"கேபினட் கூட்டத்தில் அமைச்சர்கள் யாரும் விவாதத்தில் ஈடுபடவில்லை. தொடக்கம் முதலே அனைவரும் மௌனமாகவே இருந்தனர். ஒவ்வொரு அமைச்சருக்கும் சில தாள்கள் கொடுக்கப்பட்டன. அதில், முடிவு எடுக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தன. அதைப் படித்துப் பார்த்துவிட்டு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர். பத்து நிமிடத்தில் முடிந்திருக்க வேண்டிய கூட்டம். ' அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது' என்ற தோற்றம் தெரிய வேண்டும் என்பதற்காகவே, அனைவரும் ஒரு மணி நேரம் காத்திருந்தனர்" என விளக்கிய தலைமைச் செயலக அதிகாரி ஒருவர், " இன்றைய கூட்டத்தில், முக்கியமான மூன்று பிரச்னைகள் குறித்து கேபினட்டில் முன்வைக்கப்பட்டது. முதலாவதாக, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதன்பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவது தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. கேபினட் முடிவு குறித்து, ஆளுநர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதி பெறப்பட உள்ளது. 
இரண்டாவது, தமிழ்நாட்டில், 'அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளைப் பதிவு செய்யக் கூடாது' என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், பத்திரப் பதிவுத்துறைக்கு நாளொன்றுக்கு 30 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில், ' அங்கீகரிக்கப்படாத எந்த மனைப் பிரிவுகளுக்கும் சார்-பதிவாளர்கள் அனுமதி வழங்கக் கூடாது; நஞ்சை நிலங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கலாம்' எனவும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, அரசாணை வெளியிடப்பட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். மூன்றாவதாக, உணவு மானியம் தொடர்பாக, மத்திய அரசு எடுத்துள்ள முடிவால் மாநில அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் 1,500 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்படுவது குறித்து கேபினட்டில் முன்வைக்கப்பட்டது. ரேசன் அரிசி மானியத்தால் தமிழ்நாட்டில் 1.90 லட்சம் பேர் பயனடைகின்றனர். இவர்களை வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ளவர்கள் என தரம் பிரிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவற்றின்மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முன்வைக்கப்பட்டது" என விரிவாகப் பேசி முடித்தார். 
ஓ.பி.எஸ் கூட்டிய அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தமிழக அரசு. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு ஜூலை 6-ம் தேதி முதல் கேபினட் கூட்டம் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. அப்போது தமிழக பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தற்போது முதல்வர் இல்லாமல் நடக்கும் கூட்டம் என்பதால், மௌனமாகவே கூடிக் கலைந்தனர் தமிழக அமைச்சர்கள்.

ad

ad