புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2016

நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்: சென்னையில் ஓவியக் கண்காட்சி, சொற்பொழிவு டி.வி.டி. வெளியீடு


தமிழ் திரையுலகின் மார்கண்டேயனான நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாளையும், அவரது திரையுலக வாழ்வின் 50-வது ஆண்டு
விழாவையும் வெகுசிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள நடிகர் சூர்யாவும், கார்த்தியும் அவர் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தி மாபெரும் கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1965-ம் ஆண்டில் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். அதன்பின்னர், ‘கந்தன் கருணை’, ‘உயர்ந்த மனிதன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார்.
சிவாஜி கணேசனுடன் 14 படங்களிலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இரு படங்களிலும், காதல் மன்னன் ஜெமினி கணேசனுடன் 7 படங்களிலும், நவரச திலகம் முத்துராமனுடன் 11 படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள சிவக்குமார், ஜெயலலிதாவுடன் 7 படங்களில் நடித்துள்ளார்.
1970-களில் தொடங்கி இவர் கதாநாயகனாக நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘அரங்கேற்றம்’, ‘மேல்நாட்டு மருமகள்’, ‘ஆட்டுக்கார அலமேலு’, ‘அன்னக்கிளி’, ‘பத்ரகாளி’, ‘கவிக்குயில்’, ‘சிட்டுக்குருவி’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற அன்றைய இளையதலைமுறை நடிகர்களுடனும் இவர் சேர்ந்து நடித்துள்ளார். ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தின் மூலம் சதமடித்த சிவக்குமார் ‘வண்டிச் சக்கரம்’, ‘சிந்து பைரவி’ ஆகிய படங்களில் நடித்து 1990-ம் ஆண்டுவரை பரபரப்பான நடிகராக வலம் வந்தார்.
‘இனி ஒரு சுதந்திரம்’, ‘பொன்னுமணி’ ஆகியப் படங்களில் வயதான தோற்றத்தில்வரும் இவர் தனது குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கூடாத பழக்கங்களை தவிர்த்தும், உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் உள்ளிட்ட மனவளக்கலையில் தீவிர அக்கறை செலுத்தியும், கிசுகிசுக்களுக்கு இரையாகாமலும் இளமைமாறாத உடற்கட்டுடன் இன்றும் காணப்படும் இவரை ‘தமிழ் திரையுலகின் மார்கண்டேயன்’ என பலர் குறிப்பிடுவதுண்டு.
சினிமா உலகுக்குள் நுழைவதற்கு முன்னர் சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்ற சிவக்குமார், விளம்பர ஓவியங்கள் வரைபவராக ஆரம்பத்தில் பணியாற்றியுள்ளார். சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த வேளையிலும் ஓய்வாக இருக்கும்போதும் ஓவியங்கள் வரைவதை வழக்கமாக கொண்ட இவர், கவியரசு கண்ணதாசனின் கதை, வசனத்தில் தயாரான ‘அதைவிட ரகசியம்’ படத்தில் ஓவியராக நடித்துள்ளார்.
தனது தாயாரின் பெயரில் ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதியுதவி அளிக்கும் அறக்கட்டளை ஒன்றையும் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
தற்போது ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளின் மூலம் சாதனை படைத்துவரும் இவர் இதுவரை 195 படங்களில் நடித்துள்ளார். விரைவில் இரட்டை சதம் அடிக்கவும் காத்திருக்கிறார்.
வரும் 27-ம் தேதி 75-வது பிறந்தநாள் காணும் நடிகர் சிவக்குமாரை பெருமைப்படுத்தும் விதமாக இவரது மகன்களும் இன்றைய பிரபல நடிகர்களுமான சூர்யாவும், கார்த்தியும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு சினிமா உலகில் அவர் அடியெடுத்து வைத்த 50-வது ஆண்டாகவும் அமைந்துள்ளதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமி கலைக்கூடத்தில் சிவக்குமார் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக்க இவரது மகன்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
வரும் 24-ம் தேதி திறந்து வைக்கப்படும் இந்த கண்காட்சி வரும் 26-ம் தேதிவரை நடைபெறவுள்ளது. சிவக்குமாரின் கைவண்ணத்தில் உருவான 140 ஓவியங்களை இந்த கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு சிறிய புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன.
சிவக்குமார் நடித்த பல படங்கள் தொடர்பான அரிய புகைப்படங்களும், சில முக்கிய தகவல்களும் இந்த புத்தகங்களில் இடம்பெறுகிறது. மேலும், சிவக்குமார் ஆற்றிய பத்து முக்கிய சொற்பொழிவு காட்சிகளும் டி.வி.டிக்களாக வெளியாகவுள்ளது

ad

ad