புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2016

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி அடைந்துள்ளது.
 தேமுதிக, மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகள், பாஜக, பாமக உள்பட பல்வேறு கட்சிகள் திமுகவின் அழைப்பைப் புறக்கணித்துவிட்டன.

காவிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.25) நடைபெற்றது.
கூட்டத்தைத் துவங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசியது:

காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படும் அரசியல் கட்சிகளும்கூட கர்நாடக அரசுடன் கைகோர்த்து ஓரணியில் திரண்டு பல முறை அனைத்துக் கட்சி கூட்டங்களையும் நடத்தியுள்ளன.
இந்த நேரத்தில் தமிழகத்தின் ஒற்றுமையைப் பற்றித் தவறான எண்ணம் ஏற்படுவதைத் தவிர்த்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். அதிமுக உள்ளிட்ட தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டன. இதுபோன்ற கூட்டத்தை தமிழக அரசு அல்ல, வேறு எந்தக் கட்சி கூட்ட முன்வந்திருந்தாலும் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அதில் திமுக நிச்சயம் பங்கேற்றிருக்கும்.

எங்கள் முயற்சி வெற்றிபெறக் கூடாது என்பதற்காக ஊடகத்துறையைச் சேர்ந்தோரும், வேறு துறையைச் சேர்ந்தோரும் ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களுக்குக் காவிரி பிரச்னையைவிட, திமுகவின் மீதான காழ்ப்புணர்ச்சிதான் மிகுதியாகும்.
ஆக்கப்பூர்வமான நோக்கத்தை நிறைவேற்ற தமிழகத்தில் சிலர் யோசிக்கின்றனர் என்றால், அவர்களைûச் சரித்திரம் அடையாளம் காட்டும். கூட்டத்துக்கு இன்று வராதவர்கள், நாளை வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பு: காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பார்வர்டு பிளாக் மாநிலப் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், விவசாய சங்கங்கள் கூட்டு இயக்கத்தின் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் அனைவரும் சிறிது நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர்.  சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் அனைவரும் எந்தவிதக் கருத்து வேறுபாடு இல்லாமல், ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் மதிக்கவில்லை என்பதைக் கண்டிக்கும் வகையிலும் தமிழக சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.

விவசாயிகளுக்கு இழப்பீடு: குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப குழுவினரின் அறிக்கை நடுநிலையுடன் இல்லை ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் தோல்வி: தேமுதிக, பாஜக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் என தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டன. திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கூட்டத்தில் பங்கேற்றன. 

ad

ad