புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

திருச்சி அருகே எட்டு பேரை கொலை செய்து புதைத சப்பாணி கைது


திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந்தேதி அவர் திடீரென்று மாயமானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தங்கதுரையின் செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கினர். இதில் அவரது நண்பர் கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்த சப்பாணி(35) நகைக்காக தங்கதுரையை கொன்று புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சப்பாணி அடுத்தடுத்து 8 பேரை கொலை செய்து உடல்களை புதைத்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதிர்ச்சியடைந்த போலீசார் முதல் கட்டமாக தங்கதுரையின் உடலை தோண்டி எடுத்து, அவரது உடல் பாகங்களை மருத்துவ ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் யாரையெல்லாம் சப்பாணி கொன்று புதைத்து உள்ளார் என்று விசாரித்தனர்.

இதில், திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியை சேர்ந்த அற்புதசாமி (70), கீழகுமரேசபுரம் விஜய்விக்டர் (27), கூத்தைப்பாரை சேர்ந்த சத்தியநாதன் (45), பனமட்டை என்கிற பெரியசாமி (75), உப்பிலியபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் குமரேசன் (50), வேங்கூரை சேர்ந்த தங்கதுரை (36), சப்பாணியின் தந்தை தேக்கன் (75) ஆகிய 8 பேரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

சப்பாணி புதையல் இருப்பதாக கூறி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஒவ்வொருவரையும் அழைத்து சென்று, அவர்களிடம் உள்ள நகை, பணத்தை பறித்துக்கொண்டு பின்னர் அவர்களை கொடூரமாக கொலை செய்து உடல்களை புதைத்துள்ளார். ஒவ்வொருவருடைய உடலையும் எங்கு புதைத்தார் என போலீசாரிடம் அடையாளமும் காட்டினார்.

இதையடுத்து மீதமுள்ள 7 பேரின் உடல்களையும் தோண்டி எடுத்து பரிசோதனை நடத்த வேண்டி இருந்ததால், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சப்பாணியை நேற்று முன்தினம் திருவெறும்பூர் போலீசார் காவலில் எடுத்தனர். நேற்று காலை திருவெறும்பூர் தாசில்தார் ரெங்கராஜன் முன்னிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன், திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணசமுத்திரம் பகுதிக்கு சென்றனர்.

அங்கு வயல்காட்டு பகுதியில் ஏற்கனவே தங்கதுரையின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே புதைக்கப்பட்டு இருந்த சத்தியநாதனின் உடலையும் தோண்டி எடுத்து உடற்பாகங்களை சேகரித்தனர். சத்தியநாதனின் உடலை அவருடைய மகள் சந்தியா போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

சத்தியநாதன் உடல் புதைக்கப்பட்டு இருந்த இடத்தில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் கிருஷ்ண சமுத்திரம் செக்குபாறை அய்யனார் கோவில் குளக்கரை அருகே புதைக்கப்பட்டு இருந்த குமரேசன் உடலையும் தோண்டி எடுத்தனர். ஆனால் குமரேசன் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கை, கால்கள் துண்டு, துண்டாக ஆங்காங்கே சிதறி கிடந்தது. தலை மட்டும் சிறிது தூரத்தில் தனியே கிடந்தது. தலை மற்றும் பிற பாகங்களை போலீசார் சேகரித்தனர். குமரேசனின் உடலை அடையாளம் காட்டிய அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதனை தொடர்ந்து சப்பாணியின் தந்தை தேக்கனின் உடலை ஓட்டாங்குச்சி பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பிலும், கீழகுமரேசபுரத்தை சேர்ந்த விஜய் விக்டரின் உடலை வடக்கு வயல் சப்பாணி கருப்பு கோவில் அருகேயும், மேலகுமரேசபுரத்தை சேர்ந்த கோகிலாவின் உடலை கூத்தைப்பார் செவந்தாகுளம் அருகேயும் சப்பாணி புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த உடல்களையும் போலீசார் தோண்டி எடுத்து உடற்பாகங்களை சேகரித்தனர். இதில் விஜய்விக்டர் உடலில் துணி இல்லாமல் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவரது ஒரு காலை வெட்டி கல்லணையில் வீசிவிட்டதாகவும், மற்றொரு காலை அருகே இருந்த கல்லூரி வளாகத்துக்குள் வீசி விட்டதாகவும் சப்பாணி போலீசாரிடம் கூறினார். மேலும், கோகிலாவின் தலை மற்றும் கால்களை வெட்டி குளத்தில் வீசி விட்டதாகவும் கூறினார்.

இதுவரை தங்கதுரை உள்பட 6 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் மேலும் பலர் நகை, பணத்துக்காகவும், நரபலிக்காவும் பலர் கொன்று புதைக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கியுள்ளனர். 

ad

ad