புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2016

இப்படியொரு பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டுமா திருமா?' -ஸ்டாலினுக்கு 'நோ' சொல்ல வைத்த வைகோ

காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க கூட்டவிருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை
மக்கள் நலக் கூட்டணி புறக்கணித்துவிட்டது. ' இது தி.மு.க.வுக்குக் கிடைத்த மாபெரும் தோல்வி. கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் சூழலைத் தவிர்த்துவிட்டார் திருமாவளவன்' என்கின்றனர் மக்கள் நலக் கூட்டணி தரப்பில். 
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக, மக்கள் நலக் கூட்டணிக்குள் இருவேறு கருத்துக்கள் நிலவி வந்தன. ' இந்தக் கூட்டத்தை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும்' என அறிவித்தார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ஆனால், திருமாவளவனோ, ' பொதுப் பிரச்னை என்ற அடிப்படையில் கூட்டத்தை புறக்கணிக்க விரும்பவில்லை. கூட்டணித் தலைவர்களுடன் பேசி முடிவு செய்வோம்' என்றார். இதையடுத்து, நேற்று வி.சி.க.வும் இடதுசாரிகளும் கூடி விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் வைகோ பங்கேற்கவில்லை. வைகோவின் கருத்தை அறிய, நேற்று இரவு அவருடைய வீட்டில் சந்தித்தார் திருமாவளவன். இந்த சந்திப்பில் பேசிய வைகோ, 'விவசாய சங்கங்கள் ஒன்றுதிரட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றோம். அதன்பிறகு, ரயில் மறியல் போராட்டம் என தீவிரமான எதிர்பைப் பதிவு செய்தோம். 
காவிரி விவகாரம் வெடிக்கும்போது, அமைதியாக இருந்துவிட்டு இப்போது அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார்கள் என்றால் என்ன காரணம்? ' மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தி.மு.க பக்கம் இருக்கின்றன' என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டும் முயற்சியில் தி.மு.க இறங்கிவிட்டது. எனவே, அவர்கள் கூட்டும் கூட்டத்தில் வி.சி.க பங்கேற்றால், கூட்டணி உடைந்துவிட்டது என்ற தோற்றத்தை வெளியில் பரப்புவார்கள். தி.மு.க.வின் சதிச் செயலுக்கு நாம் இணங்கிச் சென்றுவிட வேண்டாம். கூட்டணி உடைப்புக்கு வி.சி.க காரணம் என்ற பழிச்சொல்லுக்கு நீங்கள் ஆளாகிவிட வேண்டாம்' என வேண்டுகோள் வைத்தார். ' வைகோ கருத்தில் திருமாவளவனும் உடன்பட்டார்' என்கின்றனர் மக்கள் நலக் கூட்டணி தரப்பில். 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "தி.மு.க கூட்டும் கூட்டத்தில் பங்கேற்க இயலாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ' ஒரு பொதுப் பிரச்னையில்கூட அனைவரும் ஒன்றிணைய மறுக்கிறார்கள்' என்ற வேதனைதான் திருமாவிடம் மேலோங்கி இருக்கிறது. காவிரி விவகாரத்தைப் பொதுப் பிரச்னையாக கவனித்தாலும், அனைத்துக் கட்சிகளும் அரசியல் கணக்குகளுடன்தான் அணுகுகிறார்கள். வைகோவும் இடதுசாரிகளும் தன்னிச்சையாகவே தங்கள் முடிவுகளை அறிவிக்கிறார்கள். ஆனால், எங்கள் கட்சிக்குள் விவாதம் நடத்துவதற்குக்கூட அவகாசம் கிடைப்பதில்லை. டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வந்த பிறகு, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் கூடிப் பேசினர். அதில், இரண்டு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் பங்கேற்பது குறித்தும் தி.மு.க கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா என்பது பற்றியும் ஆலோசித்தனர். இதில், ' இடைத்தேர்தலில் பங்கேற்க வேண்டும்' என சி.பி.எம் முடிவெடுத்தது. மற்ற கட்சிகளுக்கு அதில் விருப்பமில்லை. இதன்பின்னர், சி.பி.எம் நிர்வாகக் குழுவைக் கூட்டி 'போட்டியில்லை' என அறிவித்தது. 
' தி.மு.க கூட்டவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்' என வி.சி.க முடிவு செய்தது. மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லை. இதைப் பற்றி எங்கள் கட்சியில் கூடி விவாதம் நடத்துவதற்குக்கூட அவகாசம் அளிக்கப்படவில்லை. இதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தி.மு.க.வின் அனைத்துக் கட்சி கூட்டத்தை பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் புறக்கணித்துள்ளன. தி.மு.க.வுடன் தோழமையில் உள்ள கட்சிகள் மட்டுமே பங்கேற்கின்றன. வேறு எந்தக் கட்சியையும் புதிதாக அவர்களால் கொண்டு வர முடியவில்லை. இது ஸ்டாலினுக்குக் கிடைத்த தோல்வி. ' இந்த ஒரு கூட்டத்தில் நாம் பங்கேற்கலாம். வேறு எந்தப் பிரச்னையிலும் நம்முடன் இணைந்து போராடுவதற்கு அவர்கள் வர மாட்டார்கள். ஸ்டாலின் தலைமையில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்க முடியுமா? அவர் ஒரு நல்ல பார்ட்னராக இருக்க மாட்டார்' என்பதுதான் மைய விவாதமாக இருந்தது. எனவேதான், ' தி.மு.க ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது கட்சி தொண்டர்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும்' என ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார் திருமா" என விவரித்து முடித்தார்.   
' மக்கள் நலக் கூட்டணியின் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக வி.சி.க அறிக்கை வெளியிட்டாலும், நாகரிக அரசியலுக்குக் கிடைத்த தோல்வியாகத்தான் திருமா கருதுகிறார்' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள். 

ad

ad