புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2016

இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறுமா?

அப்போலோவில் இப்போது ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவது போல, 1984ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் எம்.ஜி.ஆர். அந்த ஆண்டு அக்டோபரில் பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில், உடனடியாகப் பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்தார் புதிய பிரதமர் ராஜீவ்காந்தி. நாடாளுமன்றத்  தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத்  தேர்தலையும் நடத்த முடிவெடுத்தது முதல்வரின் இலாகாக்களை கவனித்து வந்த நாவலர் நெடுஞ்செழியன் தலைமையிலான அமைச்சரவை. 

நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டமன்றத்துக்கும் ஒன்றாகத் தேர்தல் நடந்தது. அ.தி.மு.கவும் காங்கிரசும் ஒரே அணியாகக் களமிறங்கின. கூட்டணி பலத்துடன் இந்திராகாந்தி மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையும், எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்று வந்ததால் ஏற்பட்ட பரிதாப அலையும் அந்த  அணிக்கு கூடுதல் பலம் சேர்த்தன. மத்தியில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. மாநிலத்தில் அ.தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடந்திருந்தது. 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38ல் மட்டும் தேர்தல் நடந்திருந்தது. 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 1 நாடாளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவில்லை.

அந்த நாடாளுமன்றத் தொகுதி, வடசென்னை. சட்டமன்றத் தொகுதிகள் பெரம்பூர்-எழும்பூர். தேர்தல் நடைபெறாததற்கு காரணம் இந்த 2 சட்டமன்றத்  தொகுதிகளிலும், நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் மரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது சுயேட்சைகள் உள்பட எந்த வேட்பாளர் மரணமடைந்தாலும் தேர்தல் தள்ளி வைக்கப்படும். இதற்காகவே, தோல்வி பயத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள் யாராவது ஒரு சுயேட்சை வேட்பாளரைக் குறி வைத்து காலி செய்து, தேர்தலைத் தள்ளிப் போடச் செய்யும் வழக்கம் இந்தியாவில் பரவலாக இருந்தது. அதனால் சுயேட்சை வேட்பாளர்கள பலர், தேர்தல் முடியும்வரை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருவார்கள். பின்னர், தேர்தல் ஆணையத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்த நடைமுறை மாறி, சுயேட்சை வேட்பாளர்கள் மரணமடைந்தால் தேர்தல் நிறுத்தப்படாது என்ற நிலைமை வந்தது.


1984 டிசம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றபோதும், அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை தொடர்ந்ததால், புதிய அரசு பதவியேற்கவில்லை. காபந்து  அமைச்சரவையே நீடித்து வந்தது. அ.தி.மு.க.வில் ஆர்.எம்.வீரப்பன் அணிக்கும் ஜெயலலிதா அணிக்குமான முட்டல்-மோதல்கள் பகிரங்கமாக வெடித்துக் கொண்டிருந்தன. இந்த நிலையில்தான், 1985 ஜனவரியில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு நாடாளுமன்றத்  தொகுதிக்குமான இடைத்தேர்தல் நடந்தது. 

மூன்றிலுமே ஆளுங்கட்சியான அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்து, எதிர்க்கட்சியான தி.மு.க.வே வெற்றி பெற்றது. வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து என்.வி.என்.சோமு வெற்றி பெற்று எம்.பி.யானார். இந்த வெற்றியை தி.மு.க பெருமையாகக் கொண்டாடியது. காரணம், இதே வடசென்னையில் அதற்கு முந்தைய 1980ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜி. லட்சுமணன், நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகரானார். (இப்போது அ.தி.மு.கவின் தம்பிதுரை போல). பதவி கிடைத்த சில மாதங்களிலேயே லட்சுமணன், காங்கிரசுக்குத் தாவி விட்டார். (அப்போது கட்சித்தாவல் தடை சட்டம் இல்லை. அதனால் எம்.எல்.ஏக்கள்-எம்.பிக்கள் சிங்கிளாகவே ஜம்ப் ஆகி விடுவார்கள்). 

அந்த லட்சுமணன் அதே வடசென்னையில் காங்கிரஸ் வேட்பாளராக அ.தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்ட நிலையில்தான் அவரை எதிர்த்து தி.மு.க.வின் என்.வி.என்.சோமு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான போது, ‘துரோகம் தோற்றது’ என்று தலைப்பிட்டது முரசொலி.

இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் எழும்பூரில் தி.மு.க வேட்பாளர்  பாலன் வெற்றி  பெற்றார். பெரம்பூரில் போட்டியிட்ட தி.மு.க.வின் இளம் வேட்பாளர் பரிதிஇளம்வழுதி வெற்றிபெற்று, முதன்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார். அதன்பிறகு நடந்த தேர்தல்களில் அவர் தொடர்ச்சியாக எழும்பூர் தொகுதியில் களமிறங்கினார். (1991ல் ராஜீவ்காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையில் அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றபோது, எழும்பூரில் சுயேட்சை வேட்பாளர் மரணத்தினால் தேர்தல் நிறுத்தப்பட்டது. பின்னர் நடந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடித்து தி.மு.க.வின் பரிதி இளம்வழுதியே வென்றார்)

1984ல் மகத்தான  வெற்றி பெற்ற அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக 3 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. மருத்துவமனையிலிருந்து எம்.ஜி.ஆர் திரும்பி வருவதற்குள் நடந்த நிகழ்வு இது. 

சாத்தான்குளம்-திருமங்கலம்-ஸ்ரீரங்கம் ஃபார்முலாக்கள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் பலவற்றில் ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி  பந்தாடியிருக்கிறது. திண்டுக்கல் தொடங்கி மதுரை கிழக்கு-மருங்காபுரி வரை தி.மு.க-அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுமே இடைத்தேர்தலில் எதிர்பாராத முடிவுகளை சந்தித்துள்ளன.

ad

ad