புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2017

எது பச்சை துரோகம்? ஓ.பி.எஸ். பதில்





முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். 

கேள்வி : நீதிக்கேட்டு பயணம் தொடங்குவதாக சொன்னீர்களே, அது எப்போது

பதில் : உயர்நீதிமன்ற உத்தரவுபடி உள்ளாட்சித் தேர்தல் தேதியை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு மக்களை நேரடியாக சந்திக்கும் நீதிக்கேட்டு பயணம் நிகழ்ச்சி தொடங்குவோம்.

கேள்வி : குடும்பத்தினுடைய ஆதிக்கம் கட்சியில் இருக்காது என்று அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே, 

பதில் : வார்த்தைகளால்தான் அதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் செயல்முறையில் அந்த மாதிரி இல்லை என்பதை நீங்கள் அனைவரும் கூர்ந்து கவனித்தாலே அது நன்றாகவே தெளிவுப்படும்.

கேள்வி : சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்திருக்கிறார். மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என எம்எல்ஏக்களுக்கு நீங்கள் வேண்டுகோள் கொடுத்தும் 122 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். அதற்குப் பிறகு உங்களுக்கான பீட்பேக் எப்படி இருக்கு. 

பதில் : ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை பதவியேற்றுக்கொள்ளுமாறு சொன்னவுடனேயே, 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்ற உத்தரவையும் தந்தார். ஏற்கனவே 10 நாட்களுக்கு மேலாக ஒரு சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தமிழ்நாட்டுக்கே தெரியும். அங்கே கூட்டம் நடத்தப்பட்டது. 

அங்கே அவர்கள் தங்கியிருப்பது தொலைக்காட்சி மூலமாக காண்பிக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் சுயமாக சிந்திக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்த முடியாமல் இருந்தார்கள். அங்கே தங்கியிருக்கும்போது என்னுடன் பேசிய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மிகவும் வருத்தப்பட்டு உறுதியாக நாங்கள் ஒரு நல்ல முடிவினை எடுத்து உங்களுக்கு எங்களுடைய ஆதரவை தருவோம் என்று உறுதியாக சொன்னார்கள். நாகரிகம் கருதி நான் அவர்கள் பெயர்களை இப்போது சொல்லவில்லை. 

அவர்களை அப்படியே கூட்டிவந்து சட்டப்பேரவையில் அமர வைத்து நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது. சட்டமன்றம் கூடியவுடனேயே, நான் சட்டப்பேரவைத் தலைவரிடம் நான் எவ்வளவோ வாதாடி பார்த்தேன். இங்கே இருக்கக்கூடிய எம்எல்ஏக்களை அவர்களுடைய தொகுதிகளுக்கு சென்று அங்கே இருக்கக் கூடிய நிலை, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சிப் பணியாற்றிய தொண்டர்களின் நிலை, அவர்களுடைய கருத்துக்கள், அவர்களோடு சேர்ந்து வாக்களித்த பொதுமக்களின் கருத்துக்களை கேட்கட்டும். 

ஜெயலலிதா முதல் அமைச்சராக வரவேண்டும் என்றுதான் நான் உள்பட அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை அன்றைய பொதுத்தேர்தலில் இருந்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல் அமைச்சராக யார் வரவேண்டும் என்று கட்சியின் அடிப்படை தொண்டர்களிடம் இருந்தும், பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அந்த கருத்துக்கு மாறுபட்ட கருத்தினை எந்த சட்டமன்ற உறுப்பினரும் எடுக்கக் கூடாது என்றும், ஜனநாயகத்தின் மரபுப்படி இவர்களெல்லாம் தொகுதிக்கு சென்று 4, 5 நாங்கள் மக்களை சந்திக்க வாய்ப்பு கொடுங்கள், மீண்டும் சட்டமன்றத்தை கூட்டுங்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அப்போது கொண்டுவாருங்கள். ஒரு நியாயமான முடிவு கிடைக்கும். அதுதான் ஜனநாயகத்திற்கும் நல்லது என்று எவ்வளவோ வாதாடி பார்த்தோம். ஆனால் அதற்கு சட்டப்பேரவைத் தலைவர் மறுத்தார் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.

கேள்வி : அப்போதைய நிலையில் அவர்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தார்கள். கூவத்தூரில் இருந்து நேரடியாக கொண்டுவரப்பட்டார்கள். நீங்கள் சொன்ன மாதிரி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உங்களோடு பேசினார்கள் என்றாலும் கூட, வாக்கெடுப்புக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எந்த மாற்றமும் வரவில்லையே

பதில் : உங்களுக்கு நன்றாகவே தெரியும். இன்றைக்கு அவர்களெல்லாம் எதையும் மீறி செய்ய முடியாத ஒரு சூழலுக்குள், வளையத்திற்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். 

கேள்வி : கூவத்தூரில் அடைத்து வைக்கப்படவில்லை. இப்போது அவர்கள் தொகுதிக்கு செல்கின்றனர். இப்போது அவர்கள் கருத்து சொல்வதற்கு என்ன சிக்கல் இருக்க முடியும். 

பதில் : நாங்கள் இந்த தவறான முடிவை எடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று மனவருத்தப்படி எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் பல்வேறு இடங்களில் பேசி அதுவும் என் காதுக்கு வந்துள்ளது. எங்களுக்கு வாக்களித்த மக்களை சந்திக்க முடியாத சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. மக்களை சந்தித்தால் அவர்கள் கேட்கக்கூடிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழல்கள் ஏன்தான் எங்களை இயக்கக்கூடியர்கள் செய்தார்களோ என்ற வருத்தத்தில் இருக்கிறோம் என வெளிப்படையாக பேசுகிறார்கள்.

கேள்வி : இயக்கக்கூடியவர்கள் என யாரை சொல்கிறார்கள். முதல் அமைச்சரையா, கட்சி பொறுப்பில் உள்ளவர்களையா.

பதில்: உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களை யார் இயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது. அந்த நிலை ஏன் உருவானது என சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நினைக்கிறேன்.

கேள்வி : டி.டி.வி. தினகரன் சொல்கிறார், மக்கள் எதிர்ப்பு என்பது செயற்கையாக உருவாக்கப்படுகிறது. திமுக உருவாக்குகிற செயற்கையான எதிர்ப்புத்தான். மக்களிடம் இருந்து எதிர்ப்பு இல்லை என்ற கருத்தை முன் வைக்கிறார்.

பதில்: தமிழக மக்கள் மிகவும் அறிவாளிகள். மக்களுடைய எண்ணங்களை, மக்களுடைய தீர்ப்புகளை யாரும் செயற்கையாக உருவாக்க முடியாது. உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு பிரச்சனை செயற்காக உருவாக்கப்பட்டதா. அது தானாகவே எழுந்த எழுச்சி. அந்த எழுச்சியினுடைய வடிவம்தான் ஜல்லிக்கட்டுக்கான அறப்போராட்டம். 

கேள்வி : ஜல்லிக்கட்டு மாதிரியான ஒரு உணர்வோடு மக்கள் இப்போதும் ஒரு அறப்போராட்டத்திற்கு தயாராக இருக்கிறார்களா. 

பதில்: ஜல்லிக்கட்டு ஒரு உதாரணம்தான். இன்றைக்கு இருக்கிற அரசியலுடைய அசாதாரண சூழ்நிலை,  திடீர் மாற்றங்களை எந்த மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் இன்று இருக்கக் கூடிய உண்மையான நிலை. 


கேள்வி: பன்னீர்செல்வத்தை முதல் அமைச்சராக முன்நிறுத்தினோம். ஆனால் அவர் பச்சை துரோகம் செய்துவிட்டதாக சசிகலா கூறுகிறாரே

பதில்: நான் வேண்டாம் என்று சொன்னேனே. நான் வேண்டாம் என்று சொன்னபோது என்னை முதல் அமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்தீர்கள். சட்டமன்ற உறுப்பினர்களை கூப்பிட்டு நான்தான் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று நான் கேட்டுள்ளேனா. அமைச்சர்களிடம் நான் கேட்டுள்ளேனா. தலைமைக் கழக நிர்வாகிகளிடம் நான் கேட்டுள்ளேனா. எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லையே. அப்படி இருக்கையில் நான் பச்சை துரோகம் செய்திருக்கிறேன் என்று சொல்லுவற்கு என்ன காரணம். இதில் எது பச்சை துரோகம். சதி செய்துவிட்டார் என்று சொல்லுகிறார்கள். என் அரசியல் வாழ்விற்கு வீண் பழி சுமத்துகிறார்கள். இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். 

கேள்வி : நான் முதல் அமைச்சராக வர விருப்பப்படவில்லை. கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் யார் வேண்டுமானாலும வரட்டும் என்று சொன்னீர்கள். எடப்பாடி பழனிசாமி வந்ததில் உங்களுக்கு என்ன?

பதில் : யார் கட்டுப்பாட்டில் அவர் இருக்கிறார். 

இவ்வாறு பதில் அளித்தார்

ad

ad