புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2017

படைக்குறைப்பு, காணிகள் விடுவிப்பை உடன் மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச்
சொந்தமான 6124 ஏக்கர் காணிகள், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா வலியுறுத்தியுள்ளார்.
2016 ஒக்ரோபர் 10ஆம் நாள் தொடக்கம், 20ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டதன் மூலம் கண்டறிந்த விடயங்கள் தொடர்பாக இவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்த அறிக்கையில் அவர் மேலும்,கூறியுள்ளதாவது-
சிறிலங்கா அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்துக்காகவும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காகவும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் அரசாங்கத்துக்கும் நாட்டின் சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது.
குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலைமை ஆராயப்படாமல் உள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சிறுபான்மை மக்கள் தாம் பாதுகாப்பானவர்கள் என்பதை உணர வேண்டும். இது இனங்களுக்கிடையிலான பதற்றத்தை குறைப்பதற்கு உதவுவதுடன் நல்லாட்சியின் முக்கிய காரணியாகவும் அமையும்.  தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகள் சிறுபான்மை மக்களின் உரிமையை உறுதிப்படுத்துவதிலேயே தங்கியிருக்கின்றன.
சிறுபான்மை மக்கள் உயர்மட்ட தீர்மானம் எடுக்கும் நிலைகளுக்கு உள்ளீர்க்கப்பட வேண்டும். நல்லாட்சியின் செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கு சமூகத்தின் நம்பிக்கை மீளுருவாக்கப்பட வேண்டும். கடந்த கால தவறுகள் தொடர்பாக பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதுடன் இலங்கையர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அவசியமாகும்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகளும் நிலைமாறு கால நீதி தொடர்பான செயற்பாடுகளும் எப்போதும் இல்லாதவாறான சிறந்த எதிர்காலத்திற்கான சந்தர்ப்பத்தை சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. எனவே சிறுபான்மை மக்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான கட்டமைப்பை அரசாங்கம் கால அட்டவணையுடன் முன்வைக்க வேண்டியது அவசியம்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகம் நல்லிணக்கத்தை கூட்டிணைப்பதற்கான செயலகம் ஆகியன முக்கியமான வகிபாகத்தை வகிக்கின்றன. காணாமற்போனோரை கண்டறிவதற்கான அலுவலகம் விரைவாக இயங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.
சிறுபான்மை மக்களின் விடயங்களை ஆராயும் நோக்கில் அரசியலமைப்புக்குட்பட்ட சிறப்பு சுயாதீன ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும். இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.
இந்த ஆணைக்குழுவின் ஆணை தீர்மானம் எடுக்கும் தரப்புக்கு ஆலோசனை வழங்குவதாக இருக்க வேண்டும். தாம் ஒதுக்கப்பட்டுள்ளவர்களாக சிறுபான்மை மக்கள் கருதுகின்றமையை தடுத்து அந்த மக்கள் பாதுகாப்பை உணரும் வகையில் நடவடிக்கை வேண்டும்.
சிறுபான்மை மக்களின் அரசியல் பங்களித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களின் அரசியல் பங்களிப்பானது பல வழிகளில் முன்னெடுக்கப்படலாம்.
சமஷ்டி முறைமையிலான அதிகாரங்களை பகிரும் முறைமை, நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்ட ஆசன முறைமை என்பன ஊடாக செய்யப்படலாம். எதிர்கால தேர்தல் முறை மாற்றங்களானது அனைத்து சிறுபான்மை மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஏற்பாடாக அமைய வேண்டும்.
அரசியல் உள்ளீடுகளில் சிறுபான்மை மக்களின் நேர்மையான அழுத்தங்கள் உள்ளீர்க்கப்பட வேண்டியது அவசியம்.
பல்மொழி சமூகங்களுக்கிடையிலான சமூக உறவு அதிகாரிகளை நியமிப்பதற்கு நான் பரிந்துரை செய்கிறேன். அனைத்து அரச நிறுவனங்களிலும் மாகாண அலுவலகங்களிலும் காவல் நிலையங்களிலும் முப்படைகளிலும் இவ்வாறு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்புத் தொடர்பான முன்னெடுக்கப்பட்டு வரும் ஆலோசனை செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை. ஆனால் அனைத்து மட்டங்களிலும் இந்த ஆலோசனை செயற்பாடுகள் நிறுவனமயப்படுத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்புத் தொடர்பான செயற்பாடுகள் மக்களுக்கு அனைத்துக் கட்டங்களிலும் அறிவிக்கப்பட வேண்டும். வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலமாக அநீதிகளுக்கு உட்படுத்துகின்றவர்களையும் வன்முறைகளை தூண்டுகின்றவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இன மற்றும் மத ரீதியாக வன்முறைகளில் ஈடுபடுவர்களை தண்டிக்காமல் இருக்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும்.
அனைத்து மட்டங்களிலும் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களையும் பாரம்பரிய பிரதேசங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்று மொழிகளிலும் தரமான கல்வியைப் புகட்டவும் தமிழ் பேசும் ஆசிரியர்களின் குறைபாட்டை நீக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போரின் பின்னரான சிறிலங்காவில் அமைதியான சகவாழ்வை உறுதிப்படுத்த அரசாங்கம் விரிவான திட்டமிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட உண்மையைக் கண்டறிதல், நல்லிணக்கத்தை உருவாக்குதல், காயங்களை ஆற்றுதல் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்.
இதற்கான பொறுப்புக்கூறல் செயற்பாடு இடம்பெறுதல் வேண்டும். இது ஒரே இரவில் செய்யப்பட முடியாதது. இது தொடர்பான அரசாங்கத்தின் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான அரசியல் எதிர்பார்ப்பை அரசாங்கம் மிகவும் வலுவான முறையில் வெளிக்காட்ட வேண்டியது அவசியம்.
சிறிலங்கா அரசாங்கம் முன்னுரிமை நடவடிக்கையாக வடக்கில் படையினர் வசம் உள்ள பொதுமக்களின் 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும். கரையோரப் பிரதேசங்களில் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தற்போது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக ஒரு முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.
இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாத காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும். எந்தவிதமான முறையான செயற்பாடும் இன்றியும் நட்டஈடு இன்றியும் அபகரிக்கப்பட்ட காணிகள் மீள வழங்கப்பட வேண்டும் அல்லது நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவம் அகற்றப்படுகின்றமையானது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமானது மட்டுமன்றி ஒரு அடையாளத்துக்காகவும் செய்யப்பட வேண்டும்.
பொலிஸார் இன மற்றும் மொழி பிரதிபலிப்பை சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இதன்மூலமே நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு காணப்படுகின்ற தடைகளை நீக்க முடியும்.
மோதல் மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாத செயற்பாடானது மக்களின் நம்பிக்கை கலாசாரம் மற்றும் அடையாளத்துக்கான உணர்வுகளைப் பாதித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். இதற்காக அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் ஐ.நா.வின் இடம்பெயர் மக்கள் தொடர்பான பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஆனால் புதிய சட்டமானது அனைத்துலக தரத்திற்கு அமைய வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமைகள் உடனடியாக மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
அநீதிகளினால் சிறுபான்மை பெண்களும் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் உடனடியாக வாழ்வாதார உதவிகளை செய்ய வேண்டும். பெண்களின் குரல்கள் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் செவிமடுக்கப்பட வேண்டும்.
கண்டிய சட்டம், தேசவழமை சட்டம், 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலங்கள் அனைத்துலக தரங்களுக்கு ஏற்ப ஆய்வு செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்டமூலமானது அந்த சமூகத்தின் பெண்களின் ஆலோசனைகளுடன் திருத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் எந்தவிதமான அநீதிகளும் இழைக்கப்படக் கூடாது.
மலையக தமிழ் மக்களுக்காக விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் அடுத்த ஐந்து வருடத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். குடும்பங்களுக்கு 7 பேர்ச்சஸ் காணிகளை வழங்கும் செயற்பாட்டில் தோட்ட முகாமைத்துவங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ad

ad