புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2017

ஐ.நா தீர்மானத்தில் மாற்றம் செய்யவேண்டாம்-சுமந்திரன்

திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.

இதன்போது "ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனவே ஐ.நா. தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம்" என்று வலி யுத்தியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்றுக் காலை முதலாவது சந்திப்பும், அதன் பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐ.நா.வுக்கான பிரதிநிதிகளுடன் இரண்டாவது சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில்

இலங்கை அரசு 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியக் கிடைத்தது. போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்குதல் உள்ளிட்ட சில மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கின்றது. இதனை அறிந்து இது தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவே அவசரமாக ஜெனிவா வந்தேன்.

பிரிட்டன் இந்த முறை தீர்மானத்தைக் கொண்டு வரும்போது 2015 ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியே தீர்மானத்தைக் கொண்டு வருமாறு கோரினேன். அதற்கு ஆதரவு வழங்குவதாக பிரிட்டன் உறுதியளித்தது. அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட 18 மாத காலப் பகுதியில் இலங்கை அரசு தான் இணங்கிய விடயங்களைச் செயற்படுத்தவில்லை. எனவே, மேற்பார்வைப் பொறிமுறை மிக இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், ஆணையாளர் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்போகும் அறிக்கையில், இலங்கை அரசு 2015 ஆம் ஆண்டு இணங்கிய விடயங்கள் எதனையும் நிறைவேற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கோரினேன். காணாமற்போனோர் அலுவலகம் நிறுவப்படவில்லை, காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை, அரசியல் கைதிகள் விடுவிப்பு நடைபெறவில்லை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை.

இதனை விட முற்றுமுழுதாக உள்நாட்டு பொறிமுறையூடான விசாரணைக்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது. இதற்கு ஆணையாளர் எதிர்ப்பு வெளியிட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டதான பொறிமுறையே அமைக்கப்பட வேண்டும். அதனை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டும். பொறுப்புக் கூறல் அரசியல் தீர்வு விடயங்களிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதனை விரைந்து நிவர்த்திப்பதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஆணையாளரின் அறிக்கை அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்" - என்றார்.

ad

ad