புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2017


சாந்தன்….! இந்தப் பெயரைக் கேட்டாலே ஈழத்தவர்களுக்கு ஒரு வகையான உற்சாகம் பிறக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சரித்திர நாயகர்களில் இவரும் ஒருவர்.
உலக வரலாறுகளில் இசையாலும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இனம் எனில் அது தமிழினம் அன்றி வேறெந்த இனமாகவும் இருக்க முடியாது.
ஏனெனில் தமிழ் மொழிக்கு அத்தகைய சிற
ப்புண்டு. முத்தமிழை தன்னகத்தே கொண்டு துடிப்போடு இருக்கும் இந்த மொழியை லாவகமாக கையாண்டவர் சாந்தன்.
இதனை சரியாக உணர்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தில் சாந்தனின் பங்கினை உள்வாங்கிக் கொண்டார்.
ஈழத்தமிழர்களின் மரபோடு இசையும் கலந்தது என்பதற்கு தக்கசான்றினை இராமாயணம் எடுத்து இயம்புகிறது.
ஈழத்தின் அரசனான இராவணன், .இசையில் சிறந்த வித்துவானாகவும், வீர யுகபுருஷனாகவும் இருந்திருக்கிறான்.
சிறந்த சிவபக்தனான இராவணன் இசையினால், சிவனை வசப்படுத்தினான். அந்த இசையை சாந்தனும் தன் நாக்கினில் உள்வாங்கியிருந்தார்.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நிலையில் சிறு குழுக்களாக இளைஞர்கள் ஒன்று திரண்டு அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக போரிட்ட வேளையில், எதிர் கொண்டுவரும் எதிரிப்படைகளை தகர்க்க ஆள்பலம் தேவை.
ஆனால், ஆரம்பத்தில் இணைந்திருந்த இளைஞர்களின் தொகை மிக மிக குறைவானது. எனினும் திறமையும், இனத்தின் மீது இருந்த பெரும் பற்றும் அவர்களை அந்தப் பாதையில் இருந்து விலகவிடவில்லை.
தொடர்ந்தும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக அணிதிரள வைத்தது. ஆரம்ப காலகட்டங்கில் விடுதலைப் போராட்டத்தையும், தமிழின உணர்ச்சிகளையும் மக்களிடத்திலும், இளைஞர்களிடத்தில் விதைத்தது தென்னிந்திய உணர்ச்சிப் பாடல்கள் தான்.
அவற்றை முச்சக்கரவண்டிகளில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி மிகச் சந்தமாக ஒலிக்கவிட்டனர்.
மக்கள் மனங்களில் அது ஒருவகையான கிளர்ச்சிகளைத் தூண்டியது. ஆனால் பின்நாட்களில் ஈழத்து இளைஞர்கள், கவிஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
போராட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டாலும், அவர்களிடத்தே மறைந்திருக்கும் ஏனைய திறமைகளை பகுத்தறிந்து எந்தத்துறையில் யாருக்கு திறமைகள், நாட்டங்கள் அதிகமாக இருந்ததோ அவர்கள் அத்துறையில் வளரவும் விடுதலைப் புலிகளின் தலைமை ஏற்பாடு செய்தது.
ஆரம்பத்தில் தென்னிந்தியப் பாடல்களைக் கொண்டு ஈழப்போராட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த காலம் மெல்ல மறைந்து ஈழத்து இளைஞர்கள் ஈழமண்ணுக்கே உரித்தான மொழிநடையில் கவி வடிக்க, இன்னொரு பிரிவு அதை பாட்டாய் இசைக்க, ஈழ மண்ணின் வீர முழக்கம் இசையில் இணைந்தது.
விடுதலைப் போராட்டத்திற்கு இளைஞர்களை எவ்வாறு பிரசாரங்களும், பேச்சுக்களும் இணைத்துக் கொண்டதோ அதற்கு இணையாக விடுதலைப் போராட்டப் பாடல்களும் பங்காற்றியிருக்கின்றன.
இளைஞர்களை விடுதலைப் புலிகள் அமைப்பில் அதிகம் உள்வாங்கியதில் சாந்தனின் புரட்சிப்பாடல்களுக்கும் அதிக பங்குண்டு. கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னமே மாவீரர் வாரம் தொடங்கிவிடும்.
அந்த நாட்களில் புரட்சிப்பாடல்கள் விண்ணைப் பிளக்கும். சாந்தன் அண்ணாவின் காந்தக் குரல் செவிகளில் பாய, விடுதலை மறவர்களின் தியாகம் மனத்திரையில் ஓடும். விழிகள் இரண்டும் கண்ணீர் தானாக சிந்தும்.
எனினும் துரதிஷ்டவசமாக ஈழப்போராட்டம் 2009ம் ஆண்டு மௌனித்துப் போனது. ஆனால், அந்த வலியை மறக்கடிப்பதும், பழைய நினைவுகளை நமக்கு மீட்டித் தருவதும் சாந்தனின் புரட்சிப்பாடல்கள் தான்.
ஈழத்தின் நீங்காத நினைவுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் சாந்தனின் அந்தப் பாடல்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல், இந்த மண் எங்களின் சொந்த மண்…! தமிழர்களை தூங்கவிடாமல் எழுப்பிய பாடல் அது.
தேசியத் தலைவரின் புகழ்பாடிய பாடல்கள் ஏராளம், தேசத்தைப் புகழ்பாடிய பாடல்கள் ஒரு நூறு. தமிழினத்தை எடுத்தியம்பிய பாடல்கள் எத்தனை. அத்தனையையும் இவன் கொடுத்திருக்கிறான்.
ஈழ தேசத்திற்கு இவனால் இவன் குரலால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறான். விடுதலையை வேண்டி நிற்கும் அத்தனை தமிழர்களுக்கும், வலியை சுமந்து நிற்கும் அத்தனை உறவுகளுக்கும் இவன் பாடல்கள் தான் அருமருந்து.
புரட்சிப்பாடல்களில் இவன் புலி, பக்திப் பாடல்களில் இவன், தேச பக்தன், பிட்டுக்கு மண்சுமந்த பெருமானை இவன் பக்தி நனிசொட்டச் சொட்ட பாடியிருக்கும் பா எவ்வளவு உணர்ச்சியானது.
இவன் பாடல் இன்றி எந்தக் கோவில் திருவிழாக்களிலும் கொடி ஏறாது. ஈழம் மலர்ந்தாலும் இவன் பாடல் இன்றி தேசிய கொடி ஏறாது. தேசத்தை இசையால் கட்டிப்போட்டவன், இன்று தேச மண்ணில் விதையாகிறான்.

ad

ad