புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2017

முதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி

 முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க இறைவன்தான்
அருள் புரிய வேண்டும்'' என திருவாய் மலர்ந்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.!
இதனை வாழ்த்துச் செய்தியாக எடுத்துக்கொள்வதா? அல்லது வசைமொழியாக எடுத்துக்கொள்வதா? ஏற்கெனவே, 'தமிழகத்தை காவி மயமாக்க முயற்சிக்கிறது மத்திய அரசு', என்ற குற்றச்சாட்டு சசிகலா தரப்பினரால் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், 'பி.ஜே.பியை தமிழகத்தில் கால் ஊன்ற ஒருநாளும் விடமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் கனவான திராவிட ஆட்சி இல்லாத தமிழகம் என்ற வசனம் எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. அரசியல் சட்டத்தில் இல்லாதவற்றை எல்லாம் போலியான நிபந்தனைகளாக முன்வைத்தது சரியானதுதானா?' என்றெல்லாம் கேள்வி கேட்டு மத்திய பி.ஜே.பி-யை கடுமையாக சாடியிருந்தார். 
தமிழக தலைமைசெயலகம்
ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இடையே மோதல் வெடித்த பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்தே, மத்திய பி.ஜே.பி-க்கு எதிரான கருத்துவாதங்களும் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கவர்னரிடம் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுவிட்ட நிலையில், சசிகலா முதல்வராகப் பதவி ஏற்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், இந்தச் சூழலை தவிர்க்கும்விதமாக திடீரென தமிழகத்திலிருந்து மும்பைக்கு கிளம்பிச் சென்றார் ஆளுநர். தொடர்ந்து தமிழக அரசியலில் குழப்ப நிலை தீவிரமடைந்த பின்னரும், சாவகாசமாகவே தமிழகத்துக்கு வருகை தந்தார்.
அதன்பின்னர், ஆட்சி அமைக்கப் போதுமான ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பட்டியலோடு கவர்னரை சந்தித்த சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், காரணமே சொல்லாமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தது மேற்கண்ட சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்துவந்தது.
இந்த நிலையில், தமிழக பி.ஜே.பி தலைமையான தமிழிசை சவுந்தர்ராஜனோ, ''கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித பிரச்னையும் இல்லாமல், நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? எதிர்க்கட்சிகளோடு சுமூகமான அணுகுமுறை, ஜல்லிக்கட்டு, வர்தா புயல், தண்ணீர் பிரச்னை போன்ற விஷயங்களில் சிறப்பாக பணியாற்றி வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக நீடித்திருக்கவே, மத்திய அரசான பி.ஜே.பி ஆதரவு தெரிவிக்கிறது.'' என்று வெளிப்படையாகவே போட்டு உடைத்தார்.
உண்மையில், சசிகலாவை முதல்வராகப் பதவி ஏற்கச் செய்வதில், பி.ஜே.பி-க்கு என்ன தயக்கம்? ஏன் இந்தக் காலதாமதம்? என்ற கேள்விக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளிவர இருப்பதால் கவர்னர் காலதாமதம் செய்கிறார், நியாய தர்மங்களையும் கணக்கில்கொண்டே கவர்னர் முடிவெடுக்க வேண்டியிருப்பதால் காலதாமதம் ஆகிறது.... என்று பலரும் பல்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், பதில் சொல்ல வேண்டிய கவர்னர் மவுனமாகவே இருந்தார். இத்தனைப் பிரச்னைகளுக்கு நடுவிலும், நேரடியாக மத்திய பி.ஜே.பி அரசை குறைகூற முடியாமல், தி.மு.க-வை மட்டுமே சாடிக் கொண்டிருந்தார்கள் சசிகலா தரப்பினர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மத்திய அரசைப் பகைக்க வேண்டாம்... என்பது போல் பல காரணங்கள் அதன் பின்னணியில் இருந்தன. 
இந்த நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பும் வெளியாகியது. சசிகலா உள்ளிட்ட மூவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவசரம் அவசரமாக அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரும் கவர்னரை சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பட்டியலைக் கொடுத்தார். ஆனாலும் ராஜ்பவனில் இருந்து எந்தவித சமிக்ஞையும் வரவில்லை. அடுத்து வந்த நாட்களில் தொடர்ந்து இரண்டாவது முறையும் கவர்னரை நேரில் சந்தித்தார். இந்த இரண்டுவார இழுத்தடிப்புகளுக்குப் பிறகு பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி கவர்னர் தலைமையில் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதே நேரம் சசிகலாவுக்கு எதிர் அணியான ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு, 11 எம்.எல்.ஏ-க்களும், 10 மத்திய அமைச்சர்களும் ஆதரவு கொடுத்திருந்தனர். 
''இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க-வை உடைக்க பி.ஜே.பி வைத்திருந்த நீண்டகால திட்டத்தை இப்போது செயல்படுத்தியுள்ளது. அதற்காகத்தான் போதிய கால அவகாசத்தை ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொடுத்து இவ்விஷயத்தில் இழுத்தடித்தது. இப்போது ஓ.பி.எஸ் அணியில் உள்ள 10 எம்.பி-க்களும் மத்தியில் பி.ஜே.பி அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள். ஆக, அவர்களின் திட்டம் நிறைவேறிடுச்சு.'' என்கிறார்கள் சசிகலா தரப்பினர். 
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும்
இதனை மறுத்துப்பேசும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ''ஆட்சியையும் கட்சியையும் பிடிக்கத் திட்டமிட்ட சதி செய்த சசிகலா கும்பல்தான் இப்படி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு பிரச்னையை திசை திருப்புகிறார்கள். அவரது பதவி ஆசைக்கு ஓ.பி.எஸ் இடைஞ்சலாக இருந்ததால், கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள். அதையொட்டி எழுந்த பிரச்னைகள்தான் இத்தனைக்கும் காரணம். ஒருவேளை சசிகலாவை அவசரகதியில் முதல்வராகப் பொறுப்பேற்க வைத்திருந்தால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு இன்னொரு அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்குமா இல்லையா?'' என்று லாஜிக்கலாக கேள்வி கேட்கிறார்கள்.
நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும்... இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும்!

ad

ad