புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 26, 2017

தென்னிலங்கையில் பெரும் வெள்ளம், நிலச்சரிவுகள் - 91 பேர் பலி, 110 பேரைக் காணவில்லை


இலங்கையின் தென்பகுதியில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவுகளினால் இன்று 91 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காணமல் போயுள்ளனர். இந்த அனர்த்தத்தில் 5 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் தென்பகுதியில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவுகளினால் இன்று 91 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காணமல் போயுள்ளனர். இந்த அனர்த்தத்தில் 5 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை முதல் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தினால் 300 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 20,000 மக்கள் மண்சரிவினால் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மாத்தறை - தெனியாய, மொரவகந்த பிரதேசத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 16 பேர் காணாமல் போயுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போயுள்ளவர்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்கப்படுவதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஒரே நாளில் இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு வௌியாட்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு வருவதன் காரணமாக பிரதேச பாதைகளில் பாரிய நெரிசல் ஏற்படுவதாகவும், மீட்பு பணிகளை சரிவரை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்சரிவை பார்வையிடச் சென்ற இருவர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்திருப்பதால் அதனை அண்மித்த பள்ளமான பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஹங்வெல்ல, ரணால மற்றும் களுஅக்கல ஆகிய பிரதேசங்களில் தற்போது வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை 3.00 மணியளவில் களனி கங்கையை அண்மித்த கொழும்பு மாவட்டத்தின் கொலொன்னாவை, சீதாவக, கடுவெல மற்றும் ஹோமாகம மற்றும் கம்பஹா மாவட்டத்தின் களனி, வத்தளை மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 2000 குடும்பங்கள் வரை வௌியேற்றப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் சுணில் கன்னங்கர கூறினார்.

இதனிடையே தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக வடமேல்,சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கடும் மழை மற்றும் காற்று வீசக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. சில பிரதேசங்களில் 150 மில்லிமீட்டர் அளவு வரையான மழை எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் கூறியுள்து. அத்துடன் கடற் பிரதேசங்களில் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதனால் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த நிலையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் படையினரின் 800 பேரும் விமானப் படையின் 07 ஹெலிகப்டர்களும் நிவாரணப் பணிகளுக்காக தற்போது களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார். விமானப் படையின் எம்.ஐ. 24 ஹெலிகப்டர்கள் 2 உம், பெல் 212 ஹெலிகப்டர்கள் 3 உம், பெல் 412 ஹெலிகப்டர் மற்றும் பீ 200 ஹெலிகப்டர் ஆகியன மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை கூறியுள்ளது.பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பொலிஸாரை இணைத்துக் கொள்ள உள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அனதை்து தரத்திலுமுள்ள பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.