திங்கள், ஜூலை 24, 2017

பன்னீர்செல்வம் சூனியம் ஆக்கப் படுவாரா .அவரது அணி அழிக்கபடுகிறதா

ஓரங்கட்டப்படுகிறாரா பன்னீர்செல்வம்? அதிருப்தியில் மேலும் சில எம்.எல்.ஏ-க்கள்!
அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்ததும், "சசிகலா குடும்பத்தினரின் பிடியில் சிக்கியுள்ள கட்சியை மீட்போம். தங்கள் பக்கம்தான் பெரும்பாலான நிர்வாகிகள் உள்ளனர். அதற்காகவே தர்மயுத்தம்" என்று தெரிவித்தார்.

ஓ.பி.எஸ். அணிக்கு 11 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து, அவருடன் இணைந்து செயல்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் பன்னீர்செல்வத்தை ஆதரித்தனர்.

இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவே, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். என்றாலும், 'தங்கள் பக்கம் அனைவரும் திரும்புவார்கள். தொண்டர்கள் எங்களுடன்தான் உள்ளனர்' என்று ஓ.பி.எஸ்ஸூம், அவருடன் இருப்பவர்களும் கூறி வந்தனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க அவைத்தலைவர் இ.மதுசூதனனை நிறுத்தி, களத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க இருந்தனர். ஆனால், அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணி, அ.தி.மு.க அம்மா அணி என இரண்டு பெயர்களும், தனித்தனியான சின்னங்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டன. இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்கும் இல்லை என்று தெரிவித்து, முடக்கப்பட்டது. இன்றுவரை இரட்டை இலைச் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கைது, ஜாமீனில் விடுதலை என்று காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்க, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் ஒருபுறம், ஓ.பி.எஸ் அணியினர் மற்றொருபுறம் என தனித்தனியாக கொண்டாட முடிவெடுத்து, அரசின் சார்பில் விழாக்களும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்தான், கூவத்தூர் சென்ற எம்எல்ஏ-க்களுக்கு 'கவனிப்பு' இருந்ததைப் போன்று ஓ.பன்னீர்செல்வம் பின்னால் அணிவகுத்த எம்எல்ஏ-க்களுக்கு எந்தச்சலுகையும் இல்லை என்பதாலோ என்னவோ, ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி, எடப்பாடியைச் சந்தித்து, அந்த அணியில் இணைந்துள்ளார் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ. ஆறுக்குட்டி.

இதில் வேடிக்கை என்னவென்றால், மெரினாவில் தியானம் செய்த மறுநாளே, முதல் ஆளாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தவர் ஆறுக்குட்டி. தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை; கோவையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக்குற்றச்சாட்டை ஓ.பி.எஸ். ஆதரவு எம்எல்ஏ-க்கள், மறுத்துள்ளனர்.

"கோவை கொடிசியா அரங்கில் வரும் 29-ம் தேதி அன்று, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் பொதுக்கூட்டம், செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஆறுக்குட்டிதான் ஏற்பாடு செய்துவந்தார். அவர் தலைமையில்தான் அந்த பொதுக்கூட்டமே நடைபெறும் என்று சொல்லியிருந்தோம். ஆனால், என்ன நிர்பந்தத்தினாலோ, அவர் வெளியேறியுள்ளார். அவர் எடப்பாடி அணியில் இணைந்ததற்கான உண்மையான காரணத்தை அவர்தான் தெரிவிக்க வேண்டும்" என்று கோவை மாவட்ட ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ, "ஆறுக்குட்டி அவராகவே வந்தார்; தற்போது அவராகவே வெளியேறி விட்டார்" என்று தெரிவித்ததோடு முடித்துக்கொண்டார்.அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, தினகரன் ஆதரவு அணி, எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அம்மா அணி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணி, சசிகலாவின் தம்பி திவாகரன் ஆதரவு அணி என்று பல அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது.

ஓ.பி.எஸ்."சசிகலா குடும்பத்தினர் தன்னை மிரட்டி ராஜினாமா செய்யச் சொன்னார்கள். கட்சியும், ஆட்சியும் அந்தக் குடும்பத்தின் பிடியில் சிக்கிவிடக்கூடாது" என்று தெரிவித்து ஓ.பி.எஸ் வெளியேறியபோது, அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் உறுதியாகத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், 'எடப்பாடி அணியில் இருப்பவர்கள், இப்போது கல்லா கட்டி வருகிறார்களே' என்ற ஆதங்கம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

"எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும்; சசிகலாவை ஆதரிப்பவர்களே எடப்பாடி அணிக்குச் செல்வார்கள்" என்று தெரிவித்த போதிலும், வேண்டியதைப் பெற்றுக்கொண்டு, பதவியில் இருக்கும்வரை 'சௌகர்யமாக' வலம் வரலாமே என்ற எண்ணத்தில் மேலும் சில ஓ.பி.எஸ். ஆதரவு எம்எல்ஏ-க்கள் உள்ளனராம்.

தவிர, மத்திய பி.ஜே.பி. அரசின் கடைக்கண் பார்வை தற்போது ஓ.பி.எஸ்-ஐ விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்று விட்டதாலும், மத்திய அரசால் ஓ.பி.எஸ். ஓரங்கட்டப்படுவதாக வெளியாகும் தகவல்களாலும் இனி, 'அவர் அணியில் இருந்து பயன் இல்லை' என்ற முடிவில் மேலும் சில எம்எல்ஏ-க்கள் உள்ளதாகத் தெரிகிறது. அதற்கு ஏதுவாக, ஆறுக்குட்டி வந்தால் வரவேற்போம் என்று எடப்பாடி அழைப்பு விடுத்ததும், அவர் உடனே எடப்பாடியைச் சந்தித்து அந்த அணியில் இணைந்ததும், ஓ.பி.எஸ் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அடுத்துவரும் நாள்களிலும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், முதல்வர் எடப்பாடி அணிக்குத் தாவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.