வெள்ளி, ஜூலை 14, 2017

ஸ்மார்ட் அட்டைகளில் குடும்பத்தலைவருக்கு பதிலாக விஜய், நயன்தாரா படங்கள்: அரசின் கேலிக்கூத்து; அன்புமணி ராமதாஸ்

ஸ்மார்ட் அட்டைகளில் குடும்பத்தலைவர்க்கு பதிலாக அஜித், விஜய், நயன்தாரா படங்கள்: அரசின் கேலிக்கூத்து என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைப் பொருட்களைப் பெறுவதற்கான ஸ்மார்ட் அட்டைகளை வழங்குவதில் அடுத்தடுத்து கேலிக்கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சரியான திட்டமிடாமல் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளால், தகவல் தொழில்நுட்பம் குறித்த புரிதலோ, கணினி அறிவோ இல்லாத அப்பாவி பாமர மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் காகிதத்தால் ஆன குடும்ப அட்டைகள் கடந்த 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அவை 2010-ஆம் ஆண்டு புதுப்பித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போலி அட்டைகளை ஒழிப்பதற்கான கணக்கெடுப்பு நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி அப்போது புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. அதன்பின்னர் 2014-ஆம் ஆண்டு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அவை அறிவிப்புகளாகவே இருந்து விட்டன. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகும் பாதிக்கும் சற்று கூடுதலானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன.

ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. ஆனால், அவ்வாறு வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, வழங்கப்பட்ட பல ஸ்மார்ட் அட்டைகளில் குடும்பத்தலைவரின் படங்களுக்கு பதிலாக அஜித், விஜய், நயன்தாரா உள்ளிட்ட நடிகர்- நடிகைகளின் படங்கள் இடம்பெற்றிருப்பதாக ஊடகங்களிலேயே செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இன்னும் சில அட்டைகளில் மரங்கள், மண்மேடுகள் ஆகியவற்றின் படங்களைப் போட்டு, அவை தான் குடும்பத் தலைவர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவறு மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டிய கேலிக்கூத்தும் கூட.

சென்னைவாசிகள் தங்களைப் பற்றிய விவரங்களை நியாயவிலைக்கடைகளில் அளித்தனர். ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அனைத்து அட்டைதாரர்களை அழைத்த நியாயவிலைக் கடை ஊழியர்கள், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை திரும்பக் கொடுத்து அவற்றை ஆன்லைனில் பதிவு செய்ய தங்களால் முடியவில்லை என்றும், அனைவரும் சொந்த முயற்சியில் பதிவு செய்து கொள்ளும்படியும் கூறி விட்டனர். ஆனால், ஸ்மார்ட் அட்டைக்கான இணையதளத்தில் 10 கே.பி அளவுக்கு மேல் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியாததால் பலரும் பொதுச்சேவை மையங்களை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுச்சேவை மையங்களில் ஸ்மார்ட் அட்டைகள் சம்பந்தப்பட்ட சேவைகளுக்கு ரூ.30 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

படித்தவர்களுக்கே இந்தப் பணி சவாலாக இருக்கும் நிலையில் பாமர மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இதற்கான கட்டணம் அவர்களுக்கு பெருந்தொகை என்பது ஒருபுறமிருக்க இதற்காக அவர்கள் ஓரிரு நாட்களாவது பணிக்கு செல்லாமல் ஊதியத்தை இழக்க நேரிடுகிறது. ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அதிகாரிகளின் திட்டமிடாத போக்கு தான். அவர்களின் தவறுக்காக அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. அப்பாவி மக்களை இனியும் அலையவிடாமல், ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் ஒரு நாளைக்கு 100 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் அட்டை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.