செவ்வாய், ஜூலை 18, 2017

ஸ்மிருதிக்கு வாழ்த்து சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்

பெண் சேவாக்'. இப்படித்தான் ரசிகர்கள் இவரை அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், அதற்கு
சேவாக்கே எதிர்ப்பு தெரிவித்து ஸ்மிருதியை பாராட்டி இருந்தார். பொதுவாக, பெண்கள் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை அடிக்கடி காண முடியாது. இந்திய அணியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீராங்கனைகளே அதிகம். இந்நிலையில் சேவாக் பாணியில் ஆரம்பத்திலிருந்தே பெளண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசிவருகிறார் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana). மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்மிருதிக்கு, வயது 21தான். ஸ்மிருதியின் அண்ணன் ஷ்ரவணன், கிரிக்கெட்டர். அண்ணன் மகாராஷ்டிரா அணிக்காக ஆடும்போது  கிடைத்த புகழைப் பார்த்த பிறகு, ஸ்மிருதிக்கும் கிரிக்கெட் ஆசை வந்திருக்கிறது. ஏழு வயதில் பேட் பிடிக்க ஆரம்பித்த ஸ்மிருதி, ஒன்பது வயதில் மகாராஷ்டிரா அணிக்குள் நுழைந்தார்.  பதினாறு வயதிலேயே  இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
ஸ்மிருதி மந்தனா Smriti Mandhana
ஸ்மிருதி, இயல்பிலேயே வலதுகை ஆட்டக்காரர். ஆனால், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனின் பேட்டிங் ஸ்டைல் பிடித்துப்போக லெஃப்ட் ஹேண்ட் பேட்ஸ்வுமன் ஆனார். ஸ்மிருதியின் ஷாட் தேர்வுகள் அபாரமாக இருக்கின்றன. இவரின் சிக்ஸர்கள் கங்குலியின் ஆட்டத்தை நினைவுபடுத்துகின்றன. 2013-ம் ஆண்டில் குஜராத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் ஸ்மிருதி இரட்டைச்சதம் விளாசியிருந்தார். உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் முதன்முதலில் இரட்டைச்சதம் அடித்த வீராங்கனை இவர்தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூட்டில் ஏற்பட்ட காயத்தால் ஐந்து மாதங்கள் விளையாடாமல் இருந்தார். இதனால் உலகக்கோப்பைத் தகுதிச்சுற்று ஆட்டத்தில் விளையாட முடியவில்லை. ``இந்திய அணிக்காக  உலகக்கோப்பையில் ஆடுவதே என் கனவு. அது மிஸ்ஸாகப்போகிறது" எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர், வேகமாக குணமடையவே உலகக்கோப்பைக்கான அணியில்  இடம் கிடைத்தது.  
ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு அணியில்  இடம்பெற்றதும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளுத்துவாங்கினார். சொந்த மண்ணில் உலகக்கோப்பையில் ஆடும் இங்கிலாந்துக்கு, ஸ்மிருதியை எப்படிச் சமாளிப்பது என்றே புரியவில்லை. ஸ்மிருதியின் அதிரடி ட்ரீட்மென்டில் இந்தியா எளிதில் வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பத்து ரன்களில் சதத்தை மிஸ்செய்தவர், அடுத்த மேட்சிலேயே சதம் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார். இந்த உலகக்கோப்பையின் சென்சேஷனாக உருவெடுத்திருக்கிறார். 
இந்த உலகக்கோப்பைக்கு முன்னதாகவே அவர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். 2014-ம் ஆண்டு அவர் அணியில் நுழைந்த தருணத்தில், இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பக்கிங்காம்ஷைரில் நடந்த டெஸ்ட் போட்டியில், இரு அணி வீரர்களும் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில்  92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் எடுத்தது. அந்த இன்னிங்ஸில் இரண்டாவது அதிகபட்சம் ஸ்மிருதிதான். இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்களைக் குவித்தது. தாறுமாறாக ஸ்விங் ஆகிய ஆடுகளத்தில் இந்தியாவுக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது இங்கிலாந்து அணி. பதினெட்டு வயது ஸ்மிருதி அருமையாக ஆடி அரைசதம் அடித்து அணி வெற்றிபெற உதவினார். 
Smirithi Mandhana
அந்தப் போட்டியிலிருந்து ஸ்மிருதி மீது கவனம் திரும்பியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. மூன்று போட்டிகள்கொண்ட டி20 தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அதில் குறிப்பிடத்தக்க பங்களித்திருந்தார் ஸ்மிருதி. முன் காலை சாதுர்யமாக நகர்த்தி விளையாடுவதில் ஸ்மிருதி வல்லவர். முதல் இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தவருக்கு, அடுத்தடுத்த போட்டிகள் சோதனையாக அமைந்தன. இனிவரும் போட்டிகளில் அவர் மீண்டும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம். இன்று அவருக்கு பிறந்த நாள். இந்த நாளிலிருந்து அவரின் கரியர் வேற லெவலுக்குச் செல்ல வாழ்த்துகளைப் பகிர்வோம்