வியாழன், ஜூலை 13, 2017

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை? விரிவான விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவு!

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக டி.ஐ.ஜி ரூபா குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றம் நீருபிக்கபட்டால் கடும் தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் மிகவும் பரப்பரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. ஏனெனில் நேற்று சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா சிறைத்துறை ஐ.ஜி ஆர்.கே.தத்தாவுக்கு கடிதம் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில் சிறைத்துறை அதிகாரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்திருந்தார்.

அதில் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக 
சசிகலா தரப்பிடமிருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக சிறைத்துறை அதிகாரி எச்.எஸ்.சத்யநாராயண ராவ், அவரது அலுவல் உதவியாளரும்  மீதும்  புகார் கூறியுள்ளார்.

மேலும் சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையிலேயே தற்காலிக சமையிலடம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,. அவருக்கு சமைத்துக் கொடுக்க சிறையில் இருக்கும் பெண்மணி ஒருவரை பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருப்பதாகவும் 
புகார் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் 
செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி சத்தியநாராயணராவ்,  சசிகலாவுக்கு சிறையில் எவ்வித சலுகைகளும் வழங்கவில்லை என தெரிவித்தார். மேலும் சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்கு தயாராக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி ரூபா, சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். மேலும் தனக்கும், டி.ஜி.பி.சத்தியநாராயண ராவுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் ஏதுவும் இல்லை என்றும் இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தற்போது சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக டி.ஐ.ஜி ரூபா குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.