வியாழன், ஜூலை 13, 2017

எனக்கும் ஆசைதான், ஆனா கூட இருப்பவர்கள்... ஓ.பி.எஸ்.சிடம் எடப்பாடி ரகசிய பேச்சு

நீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடியால் அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழக அரசு. தேர்தலில் போட்டியிட கட்சியும் சின்னமும் கிடைக்கவேண்டுமாயின் இணைப்பு அவசியம் என்கிறார்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான அமைச்சர்கள் தரப்பு.

இதுகுறித்து அந்த தரப்பில் விசாரித்தபோது, ஓ.பி.எஸ்.சிடம் எடப்பாடி ரகசியமாகப் பேசியிருக்கிறார். அதில், "பொதுச்செயலாளர் பதவியை உங்களுக்காக விட்டுக் கொடுக்கிறோம். முதல்வர் மாற்றம் மட்டும் இப்போது வேண்டாம். இணைப்பை சாத்தியமாக்குங்கள்' என எடப்பாடி சொல்ல, ஒரு கட்டத்தில் இதற்கு சாதகமான பதிலைச் சொன்ன பன்னீர், "எனக்கும் ஆசைதான். ஆனா, என்னை நம்பி இருப்பவர்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி இணைப்பை கேள்விக்குறியாக்குகிறார்கள். அவர்களைச் சம்மதிக்க வைப்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது' என ஆதங்கப்பட்டிருக்கிறார். இது அமைச்சர் ஜெயக்குமாருக்கும் தெரிந்ததால்தான், பேச்சுவார்த்தை நடக்கிறது' என அவர் வெளிப்படையாகச் சொன்னார்.

பன்னீர்-எடப்பாடியின் ரகசிய மூவ்களை அறிந்த ஓ.பி.எஸ். அணியின் மூத்த தலைவர்கள், இந்த தனி ரூட்டை விரும்பவில்லை. இந்த நிலையில்தான், தனது நண்பர் ஒருவரை அனுப்பி மைத்ரேயனிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.  அதிகாரமிக்க பொதுச்செயலாளர் என்கிற ஆசையைக் காட்டி பன்னீரை உள்ளே இழுத்துவிட்டால் முடக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வை மீட்டுவிடலாம். அதன்மூலம் ஆட்சியில் தமக்கு சிக்கலில்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்ங்கிறதுதான் எடப்பாடியின் திட்டமாக இருக்கிறது. பன்னீரை எப்படி ஹேண்டில் பண்ணணும்ங்கிற வித்தை எடப்பாடிக்கு கைவந்த கலை' என்று விரிவாகப் பேசினார்கள். 

பன்னீரின் முகாமில் நாம் விசாரித்தபோது, ""ஓ.பி.எஸ். குடும்பத்தினரும் தனி ஆவர்த்தனத்தை விரும்பவில்லை. முதல்வர் பதவி திரும்ப கிடைக்காது என்ற நிலையில், கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை போட்டியின்றித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை கேட்கிறார் ஓ.பி.எஸ். அதற்காகத்தான் ரகசிய டீலிங்கை எடப்பாடியோடு போட்டுவைத்துக்கொண்டிருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் முக்கிய துறைகள் சார்ந்த டெண்டர் விவகாரங்களில் எடப்பாடியோடு நெருக்கமாகத்தான் இருக்கிறார்கள்'' என சுட்டிக்காட்டுகிறார்கள்.