புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், ஜூலை 10, 2017

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு!

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு!தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும். அந்த மாற்றுத் தலைமை சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைந்தால் சிறந்தது என யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் யாழ்.திருமறைக்கலா மன்றத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்பினர், அரசியல் ஆய்வாளர்கள், மத தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அதன்போது, தமிழ் தலைமைகள் தான் தடுமாறுகின்றார்கள், தமிழ் மக்கள் அல்ல. தமிழ் மக்கள் தற்கால சூழ்நிலைகளின் பொறுத்து அடுத்து என்ன செய்ய வேண்டுமென்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் போக்கு தமிழ் மக்களை அடகு வைக்கும் நிலைமையாக இருக்கின்றது. தமிழ் தேசியத்தின் போக்கினைக் கலைத்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்ற நோக்கில் அரசாங்கம் செயற்படும் அனைத்து கபட வேலைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை துணை போவதாகவும் கூட்டாக குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

தமிழ் தேசிய தலைமை வலிமையான மாற்றுத் தலைமையின் கீழ் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாற்றுத் தலைமைகள் அடித்தளத்தில் இருந்து உருவாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் ஆணைகளுக்குப் பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும். மாற்றுத் தலைமை பற்றி யோசிக்கும் நாம். ஏன் எமக்கு மாற்றுத் தலைமை என்பது பற்றி உணரவில்லை. மாற்றுத் தலைமை ஏன் தேவை என்பதனை சுட்டிக்காட்ட துணிவில்லாமல் இருப்பதாகவும் பொது மகன் ஒருவர் குற்றஞ்சாட்டினார்.

தவறுகளை குறிப்பிட்டுச் சொல்லும் துணிவு எப்போது வருகின்றதோ அன்று தான் தமிழர்களுக்கு விடிவு ஏற்படும். யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் ஆனாலும், என்ன நடந்திருக்கின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சமமானவர் எமது எதிர்க்கட்சி தலைவர் என்றால், இருந்தும், பிரதமருக்கு சமமானவர் எமது எதிர்க் கட்சி தலைவர் என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் இளமையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியதுடன், சாணக்கியத்தினை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் எங்கு சரி இவற்றினை வெளிப்படையாக கதைத்துள்ளார்களா? எமது இளைஞர்களின் இரத்தத்தினை வறுத்துக் குடிப்பதற்கும் மலையக மக்களை அடக்கி வைத்து ஆளுகின்றது போன்று ஈழ மக்களையும் அடக்கி ஆள முயற்சிக்கின்றார்கள். உங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ளுங்கள் அப்போது நாட்டு தலமைகளை மாற்றுவதற்கான எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றும். அப்போது தான் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் மாற்றுத் தலைமை வேண்டுமென்று, அதன் பிரதிபலிப்புத் தான் இப்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னால் எழுந்துள்ளார்கள்.

மாற்றுத் தலைமைக்குரிய மக்களாக நாங்கள் இல்லை. விடுதலைப் போராட்டத்திற்காக போராடிய மக்களாக நாங்கள் இன்று இல்லை. உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த தியாகி திலீபனின் பரம்பரையாக இன்று நாங்கள் இல்லை. எமது விடுதலைப் போராட்டம் அரசியல் வாதிகளின் கொள்கைகளில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது. மாற்றுத் தலைமை ஏன் எமக்கு தேவை, தமிழ் மக்களின் அரசியல் இலக்கு என்ன? அதற்கான வழிவகைகள் என்ன? இவற்றிற்கான தெளிவு கிடைத்தால் மாத்திரமே எமக்கான நீதி கிடைக்கும் என்றார்.

அதனைத் தொடர்ந்து கருத்துரைத்த அரசியல் ஆய்வாளர் சோதிலிங்கம் கூறும்போது, ஏன் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை தேவை? எமது இலக்கு என்ன? இனப்பிரச்சினை என்றால் என்ன? தமிழ் மக்கள் தேசிய இனமாக இருக்கின்றார்கள். அவர்கள் அழிக்கப்படுவது தான் இங்கு இனப்பிரச்சினை. இனப்பிரச்சினைக்கு தீர்வு எனில், தமிழ் மக்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதனால், எமக்கு மாற்றுத் தலைமை வேண்டும். எமக்கு தேர்தலின் போது கூத்தடிக்கும் அரசியல் கட்சிகள் தேவையல்ல என்றார்.

மாறாக தமிழ் மக்களின் அனைத்து விடயங்களையும் உலகம் தழுவிய ரீதியில் கையாளக்கூடிய ஒரு தேசிய அரசியல் இயக்கம், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் சார்ந்த இரு இயக்கம் அவற்றினை எவ்வாறு கட்டி எழுப்புவது? தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சியை விலத்தி புதிய ஒரு கட்சியை உருவாக்க வேண்டும். அந்த கட்சி கூட்டமைப்பாக செயற்பட்டு கோட்பாடுகளின் மத்தியில் புதிய மாற்றுத் தலைமை ஒன்றினை உருவாக்க வேண்டும். இலங்கை தமிழரசுக்கட்சியை வெளியேற்றி சாணக்கிய நகர்வின் மூலம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஒற்றுமையுடன் மக்களை ஒன்று திரட்டி, மக்களின் முற்போக்கு சிந்தனையுடன் மக்களின் உணர்வுகளை புரிந்து சிந்திக்கக் கூடிய ஒரு மாற்றுத் தலைமை அவசியமென்பதனை வலியுறுத்தியுள்ளார்கள். கூட்டு தலைமையினை நோக்கிய செயற்பாட்டின் மூலம், மக்கள் ஆணைகளை வெல்லும், தமிழ் தலைமை உருவாக்கப்பட வேண்டுமென்பதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய 3 கட்சிகளும் ஒன்றிணைந்து, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பாதையில் புதிய மாற்றுத் தலைமையினை உருவாக்குவது அவசியம். தமிழரசு கட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலக்க வேண்டுமென்றும் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொது மக்களின் உணர்வுகளுடன், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஒத்தாசையுடன் புதிய மாற்றுத் தலைமை அவசியமென்றும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்கள். மாற்றுத் தலைமையே வேண்டும். எதிர்காலத்தில் மாற்றுத் தலைமையினை உருவாக்க என்ன செயற்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டுமென்று தீர்மானங்கள் எதிர்காலத்தில் எடுப்போம் என்றும் தீர்மானித்துள்ளனர்.