வெள்ளி, ஜூலை 21, 2017

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், ஓ.பி.எஸ் ரகசிய பேச்சுவார்த்தை!

கடந்த மூன்று நாட்களாகவே முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் இருந்து கொண்டு தேனி மாவட்டத்தில் நடக்கும் நல்லது, கெட்டதில் கலந்துகொண்டு வருகிறார். 

இந்த நிலையில் தான் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் தனது பாதுகாப்பு  போலீஸ்காரர்களுக்கு தெரியாமல் தனியாக பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர்  கோவில் மலை அடிவாரத்திற்க்கு சென்று விட்டு இரவு எட்டு மணியளவில் வீடு  திரும்பியிருக்கிறார்.

இது பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் கேட்ட போது.,

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் போடி தொகுதியை தவிர மற்ற மூன்று  தொகுதி எம்.எல்.ஏக்களான ஆண்டிப்பட்டி தங்கதமிழ்ச்செல்வன், கம்பம் ஜக்கையன், பெரியகுளம் கதிர்காமு ஆகியோர் டி.டி.வி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களாக இருந்து வருகிறார்கள்.

இதில் தங்கதமிழ்ச்செல்வனுக்கும், ஜக்கையன், கதிர்காமுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு  நிலவி வருகிறது. இதனால் மனம் நொந்து போன இரண்டு எம்எல்ஏக்களும் ஒபிஎஸ் அணியில் இணைய முடிவு செய்து விட்டனர்.

இந்த தகவல் ஓ.பி.எஸ் காதுக்கு எட்டவும், அவர்களை ரகசியமாக மலை அடிவாரத்திற்கு வரச்சொல்லி ஓ.பி.எஸ் முன்னிலையில் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. அதன்  மூலம் கூடிய விரைவில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள், ஓ.பி.எஸ் அணியில் இணைய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றனர். ஆக ஓ.பி.எஸ்.சின் ரகசிய விசிட்டும் உளவு துறை மூலம் எடப்பாடி காதுக்கு போய் இருப்பதாக தெரிகிறது.