திங்கள், ஆகஸ்ட் 28, 2017

19 பேரின் எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிக்கப்படுகிறது! அதிரடி காட்டப்போகும் சபாநாயகர்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரின் எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க சபாநாயகர் முடிவுசெய்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், கடந்த 21-ம் தேதி பழனிசாமி அணியுடன் இணைந்துகொண்டனர். தினகரனை ஓரம்கட்டி நடந்த இணைப்புக்கு அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கிய நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுமீது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்துவிட்டோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையைத் தமிழக மக்களும் இழந்துவிட்டனர். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம். அதேநேரம், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நாங்கள் விலகவில்லை" என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், 19 பேரின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க முதல்வர் பழனிசாமி தரப்பு தீவிரம்காட்டிவருகிறது. இதனிடையே, 19 பேரின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க வேண்டும் என்று அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது" என்பதற்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர்.

இது தொடர்பாக, மூத்த அமைச்சர் ஒருவரை நமது நிருபர் தொடர்புகொண்டு கேட்டபோது, 19 பேரின் எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவது உண்மைதான். அவர்களின் பதவியைப் பறித்தால், தொகுதிக்கும் சட்டப்பேரவைக்கும் போகமுடியாது. 19 பேரும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா விவகாரத்தைக் காரணம் காட்டியுள்ளனர். இது தாெடர்பான வழக்கில் நீதிமன்றம் தலையில் குட்டியது. அப்போது, சட்டமன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. நீதிமன்றத்தால் அவர்களுக்குப் பின்னடைவு ஆகிவிட்டது. அதிலுள்ள பிரச்னைகுறித்து தீவிர பரிசீலனைசெய்து, தற்போது அதுபோன்று எதுவும் நடக்காதவாறு நடவடிக்கை எடுத்துவருகிறோம். சட்டப்பேரவை விதிமுறைப்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம். சபாநாயகர் தீர்ப்பே இறுதியாக இருக்கும்" என்றார்.

ஒருவேலை நடவடிக்கை எடுக்கப்பட்டால், 19 பேரும் நீதிமன்றத்தை நாடுவார்களே என்ற கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், சட்டப்படி எதிர்கொள்வோம். அதன் தீர்ப்பு எப்போது வரும் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்