சனி, ஆகஸ்ட் 19, 2017

ஒரே நாளில் 3 அணிகளும் ஏற்படுத்திய பரபரப்பு: டிவி, வாட்ஸ்அப்பை விட்டு நகராத மக்கள்


சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதே அணிகள் இணைய நிபந்தனை என்று ஓ.பி.எஸ். தரப்பு தெரிவித்தையடுத்து, டி.டி.வி.தினகரனுடன் மோதல் ஏற்பட்ட பிறகு, சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் 2 நிபந்தனைகளையும் நிறைவேறுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான நேரம் கனிந்தது என ஓ.பி.எஸ். அணியில் உள்ள மாஃபா பாண்யராஜன் தெரிவித்து வந்த நிலையில், நேற்று மதியம் சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்ற அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கைகளை பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் தெரிவித்தனர்.


நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மூத்த நிர்வாகிகள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, செம்மலை, பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்.பி., மாபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், ராஜகண்ணப்பன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆட்சி மற்றும் கட்சியில் எந்தெந்த பதவிகளை கேட்டுப்பெறுவது என்பது குறித்து விவாதித்தனர். 

அணிகள் இணைப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டு வருகிறார். இதன் மூலம் ஜனநாயக நடைமுறையை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். இணைப்புக் குறித்த அறிவிக்கை ஓ.பன்னீர்செல்வம் விரைவில் வெளியிடுவார் என்று அந்த அணியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி தெரிவித்தார்.

இதேபோல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அவரது வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதனிடையே சசிகலாவின் பிறந்தநாளையொட்டி நேற்று அவரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், முதல்வர் அறிவிப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. நான், சசிகலாவின் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தேன். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடந்தால் தான், பல்வேறு தரப்பினர் வைக்கும் புகார்களுக்கு விடை கிடைத்து, சசிகலா குற்றமற்றவர் என்பது வெளிப்படும். நீதி விசாரணை முறையாக நடைப்பெற்றால் எங்களது ஒத்துழைப்பு இருக்கும். நீதி விசாரணை மூலம் சசிகலா குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும். 

சசியிடம் ஆலோசனை பெற்று செல்கிறேன். நிச்சயம் ஆபரேசன் இருக்கும். அதனை நீங்கள் பார்க்கலாம். மேலூர் பொதுக்கூட்டத்திற்கு 20 எம்எல்ஏக்கள் வந்தனர். மேலும் சிலர் வருவார்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் எம்எல்ஏக்கள் உள்ளனர். தேவைப்படும் போது அவர்கள் வெளிவருவார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் சந்திப்பதில் தவறு இல்லை. தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிகள் இணைவது ஒன்று. ஆனால், சிலர் தங்களது பதவியை காப்பாற்ற சுயநலத்தால் இணைப்பு நடந்தாலும், அது நீடிக்குமா என்பது சந்தேகம் என்றார். 


அதேநேரத்தில் சென்னையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெற்றிவேல் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், வடசென்னையில் நடத்தப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை நடத்தினோம். ஆலோசனை வழங்க அமைப்பு செயலாளர்கள் வந்தனர். வடசென்னை வடக்கு மாவட்டத்தில் வரும் 23ம்தேதி கூட்டம் நடக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இணைவது குறித்து ரொம்ப நாளாக முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். என்ன கிவன் டேக் பாலிசி என்பது தெரியவில்லை. இரு அணிகளும் இணைந்த பின்புதான் அதுபற்றி கருத்து சொல்ல முடியும். கட்சி நாங்கள்தான்.

எங்களிடம்தான் தொண்டர்கள் பலம் உள்ளது. அவர்கள் இணைவது பற்றி நாங்கள் எந்த தவறும் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் எங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால் நாங்களும் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட்டார்கள். அப்படி எங்களை போட்டுவிட முடியும் என்று நினைக்கிறார்களா?. தொண்டர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். மேலூர் கூட்டத்தை பார்த்தீர்களா?. தொண்டர்கள் யாரிடம் இருக்கிறார்களோ அவர்களிடம்தான் கட்சி இருக்கும். பொதுச் செயலாளர் சசிகலாதான். துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்தான். ஆட்சி, அதிகாரம், பலத்தை வைத்துக் கொண்டு எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்றார். 


சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்ல காத்திருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்கு திடீரென செல்போன் அழைப்பு வந்ததால் அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி, காரில் சென்னை நகருக்குள் விரைந்தனர்.

மூன்று அணிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் செய்தி சேனல்களை மாற்றி மாற்றியும், வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை அறிய ஆர்வமுடன் இருந்தனர். இணைந்துவிடுவார்கள். இணைய மாட்டார்கள் என செய்தி சேனல்களில் விவாதம் நடப்பதுபோல், மக்களும் விவாதம் செய்ய தொடங்கி விட்டனர். 


சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகிய இரு அணிகளிலும் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை பூக்களால் அலங்கரிக்கும் பணி தொடங்கியது. 

சென்னையில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் கொடுத்தனர். நெல்லை, திருச்சி போன்ற இடங்களிலும் அதிமுகவினர் வெடி வெடித்தனர். 

எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் அவர்கள் புறப்படுவதற்கு கார்கள் தயார் நிலையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. இதனால், இருவரும் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அணிகள் இணைப்பு பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை கூட்டம் முடியாமல் இழுத்துக்கொண்டே சென்றது. அங்கிருந்த புறப்பட்ட மதுசூதனன் செய்தியாளர்களிடம், ஓ.பி.எஸ். நல்ல முடிவை எடுப்பார் என தெரிவித்தார். 

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்த அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அங்கிருந்து எந்த வித சாதகமான பதிலும் வராத நிலையில், இரவு 8.45 மணி அளவில் ஒவ்வொரு அமைச்சராக அங்கிருந்து புறப்பட்டு செல்லத் தொடங்கினார்கள்.

ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் சிலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல தொடங்கினார்கள். இதனால், அ.தி.மு.க. இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட இழுபறியின் காரணமாகவே அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மக்களின் தினசரி பொழுதுபோக்காக இருந்த  பிக் பாஸ் சற்று தொய்வாக செல்லும் நிலையில், நேற்று அதிமுக அணிகள் இணைப்பு கசமுசாக்கள்  திடீர் பொழுதுபோக்காக அமைந்தது.