புதன், ஆகஸ்ட் 23, 2017

30 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் எங்களை காலில் வச்சு தூக்கிட்டு போகணும்: தங்கதமிழச்செல்வன் பேட்டி!!

ஓ.பி.எஸ்.க்கும், இ.பி.எஸ்.க்கும் எதிராக களமிறங்கி உள்ள டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பாண்டிச்சேரியில் உள்ள வின்ட் ப்ளவர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டிடிவியின் தீவிர ஆதரவாளரான ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில் ஓய்வெடுத்து வருகிறார்கள். 

இதுபற்றி சொகுசு விடுதியில் ஓய்வெடுத்து வரும் தங்கத்தமிழ்ச்செல்வனிடம் நக்கீரன் தொடர்பு கொண்டு கேட்டபோது...

எடப்பாடி பழனிச்சாமி மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை அவருக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் திரும்ப பெறுவது என ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் கடிதம் எழுதி கவர்னரிடம் கொடுத்து விட்டு விழுப்புரம் அருகே உள்ள டெல்லு தாபா ஓட்டலில் மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு ஒரு வாரம் ஓய்வெடுப்பதற்காக பாண்டிச்சேரியில் தங்கி இருக்கிறோம்.

இதற்கு முழு காரணமே ஓ.பி.எஸ் தான். அம்மா உருவாக்கிய கட்சியை உடைத்து சின்னத்தை முடக்கி கட்சிக்கு துரோகம் செய்ததுடன் மட்டும் அல்லாமல் இந்த ஆட்சியும், ஊழல் ஆட்சி என்று சொன்னால் ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் இணைக்கப் போகிறேன் என்று 122 எம்.எல்.ஏ.க்களிடமும் ஒருவார்த்தை கூட எடப்பாடி கேட்காமல் தனது சுயநலத்திற்காக அமைச்சர் வேலுமணி, தங்கமணி மற்றும் வைத்தியலிங்கத்தை அனுப்பி அந்த கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பி.எஸ். காலில் விழுந்து கூட்டிட்டு வந்து கட்சியில் சேர்த்திருக்கிறார்கள்.

இப்படி பச்சோந்தி ஓ.பி.எஸ்.-ஐ கட்சியில் சேர்த்து துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதனால்தான் எடப்பாடி மேல் வைத்திருந்த நம்பிக்கை எங்களுக்கு போய்விட்டது அவரை மாற்றிவிட்டு வேறு முதல்வர் கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம். தற்போது எங்களோடு 19 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் அதோடு வெற்றிவேல் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்பட சில எம்.எல்.ஏ.க்கள் என 30 பேர் இருக்கிறார்கள்.

எங்கள் ஆதரவு இல்லாமல் எடப்பாடி தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாது. அதனால் எங்களை அழைத்து பேச வேண்டும். 9 எம்.எல்.ஏ.வை வைத்திருந்த ஓ.பி.எஸ்சையே அமைச்சர்கள் போய் காலில் விழுந்து கூட்டிட்டு வந்திருக்காங்க. அப்படினா எங்களிடம் உள்ளே 19 பேரும், வெளியே 11 பேர் என 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அவங்க காலில் வச்சு தூக்கிட்டு போய் அவங்க கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் தவறினால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதின் மூலம் எடப்பாடி ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட தயாராக இருக்கிறோம்.

என்றவரிடம் உங்களுடன் சொகுசு பங்களாவில் இருக்கக்கூடிய பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமுவிடமும், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையனிடமும், ஓ.பி.எஸ். இரண்டு, மூன்று முறை பேசி தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருவதாக ஒரு தகவல் வந்திருக்கிறது என்றோம்.

அப்படியெல்லாம் இல்லை அந்த இரண்டு பேருமே அண்ணன் டிடிவியின் தீவிர ஆதரவாளர்கள் அவர்கள் எங்களிடம் தான் இருப்பார்களே தவிர ஓ.பி.எஸ். பக்கமெல்லாம் போகமாட்டார்கள் அந்த ஓ.பி.எஸ்க்கு சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு இல்லை அப்படி இருக்கும்போது அவரை நம்பி ஒரு எம்.எல்.ஏ.வும் போக மாட்டார்கள் எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் எங்களோடு தான் இருக்கிறார்கள். எங்களோடு கலந்து ஆலோசிப்பதற்காக அண்ணன் டிடிவியும், பாண்டிச்சேரி வர இருக்கிறார் என்று கூறினார்.