வியாழன், ஆகஸ்ட் 24, 2017

குணசீலன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை? – குழப்பத்தில் வடக்கு அரசியல்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஞா.குணசீலனுக்கு எதிராக ரொலோ கட்சி ஒழுக்காற்று
நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமது கட்சியைச் சேர்ந்த பா.டெனீஸ்வரனைப் பதவி நீக்கி, கட்சியைச் சேர்ந்த விந்தன் கனகரத்தினத்தை நியமிக்க வேண்டும் என்று ரெலோ கட்சி வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்திருந்தது.
அந்தப் பரிந்துரையை நிராகரித்த வடக்கு முதலமைச்சர் ரெலோ கட்சியைச் சேர்ந்த ஞா.குணசீலனை வடக்கு சுகாதார அமைச்சராக நியமித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சைத் தன் வசம் எடுத்துக் கொண்டார்.
சுகாதார அமைச்சராகச் செயற்படுவதற்கான தகுதியின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும், கட்சி நலனைக் காட்டிலும் ஆட்சி நலன் முக்கியமானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நேற்று ரெலோ கட்சியின் செயலாளருக்குக் கடிதம் மூலம் விளக்கமளித்திருந்தார்.
கட்சி ஒருவரைப் பரிந்துரைத்திருந்த நிலையில் வேறொருவரை அமைச்சராக நியமித்தமை தொடர்பில் ரெலோ கட்சிக்குள் பெரும் அதிருப்தி கிளம்பியுள்ளது என்று தெரியவருகின்றது.
அதேவேளை, கட்சியின் தீர்மானத்தை மதிக்காது ஞானசீலன் குணசீலன் செயற்பட்டுள்ளமை தொடர்பிலும் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி ஆராய்ந்து வருகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.