செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து விரைவாக நீக்குங்கள்! - முதலமைச்சருக்கு ரெலோ கடிதம்


டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு ரெலோ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில் முதலமைச்சருக்கு ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-
டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு ரெலோ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் ரெலோ கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில் முதலமைச்சருக்கு ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

அன்புடையீர்,

எமது கட்சியின் தலைமைக் குழுவினால் நேற்று (20.08.2017) எடுக்கப்பட்டுள்ள முடிவின் பிரகாரம் நான் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.

வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்து, வடமாகாண ஆளுநரிடம் சமீபத்தில் கையளிக்கப்பட்ட பிரேரணையில், வேறு சில வடமாகாண சபை உறுப்பினர்களோடு இணைந்து, எமது கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பா.டெனீஸ்வரனும் கையெழுத்திட்டதன் மூலம், அவர் அங்கம் வகிக்கும் எமது கட்சியின் அங்கீகாரம் இல்லாமல் தன்னிச்சையாகவும், நன்கறியப்பட்ட எமது கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும், மாறாகவும் செயற்பட்டுள்ளார் என்பதால், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தலைமைக் குழுவினால் நேற்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தீர்மானத்தின் பிரகாரம் 20.08.2017 ஆம் திகதியில் இருந்து, அதாவது நேற்றைய தினத்தில் இருந்து, எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு எமது கட்சியிலிருந்து திரு.பா.டெனீஸ்வரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதையும், குறித்த ஆறுமாத காலத்தில் அவரது அரசியல் நடவடிக்கைகள் கட்சியினால் அவதானிக்கப்பட்டு, அக்கால முடிவில் ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தமான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்பதையும் நான் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.

ஆகவே, திரு.டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறும், அவருக்குப் பதிலாக எமது கட்சியின் சார்பில் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள திரு.விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறும், தங்களை வேண்டிக் கொள்ளுமாறு தலைமைக் குழுவினால் நான் மேலும் பணிக்கப்பட்டுள்ளேன் என்பதையும் அறியத்தருகின்றேன்.

நன்றியுடன்,

ந.ஸ்ரீகாந்தா

செயலாளர் நாயகம்,

தமிழீழ விடுதலை இயக்கம்.