வியாழன், ஆகஸ்ட் 17, 2017

மஹிந்த ஆட்சிக்கால மோசடிகளை விசாரிக்க டிரயல் அட்பார் நீதிமன்றங்கள

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மோசடிகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக மேல் நீதிமன்றங்களின் தொகையை அதிகரிக்கவும், சில நீதிமன்றங்களை டிரயல் அட்பார் விசாரணை நீதிமன்றங்களாக மாற்றவும் அமைச்சரவையில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மோசடிகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக மேல் நீதிமன்றங்களின் தொகையை அதிகரிக்கவும், சில நீதிமன்றங்களை டிரயல் அட்பார் விசாரணை நீதிமன்றங்களாக மாற்றவும் அமைச்சரவையில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இதனூடாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் குவிந்துள்ள மோசடி வழக்குகளை துரிதப்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட அவர் அரசியலமைப்பை காரணங்காட்டி இந்த நடவடிக்கைகளை இழுத்தடிக்க சிலர் முயன்றதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தாமதமாவது பற்றி இங்கு வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. கடந்த கால மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு நீண்ட காலம் பிடிக்கிறது. சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 101 மோசடிகள் தொடர்பான கோப்புகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதில் நிதி மோசடி பிரிவினூடாக வழங்கப்பட்ட 87 வழக்குகளும் சி.ஐ.டியினூடாக கையளிக்கப்பட்ட 14 வழக்குகளும் அடங்கும். இவற்றில் 25 மோசடிகள் தொடர்பில் மேலும் ஆதாரங்கள் தேவைப்படுவதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு குவிந்துள்ள வழக்குகளை துரிதப்படுத்துவது கடினமாகும். இதற்காக விசேட மேல் நீதிமன்றங்கள் அமைப்பதானால் யாப்பில் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால் இருக்கும் மேல் நீதிமன்றங்களில் ஓரிரண்டை டிரயல் அட்பார் நீதிமன்றங்களாக மாற்றி தினமும் விசாரித்தால் 2 மாதங்களில் வழக்கு விசாரணையை பூர்த்தி செய்யமுடியும் என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தவிர நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். விசேட நீதிமன்றம் உருவாக்கப்படப்​போவதாக தெரிவிக்கப்படும் செய்திகள் தவறானவை.இதற்காக அரச தரப்பு சட்டத்தரணிகள் போதுமாக இல்லாவிட்டால் தனியார் சட்டத்தரணிகளையும் பயன்படுத்த முடியும். மேன்முறையீட்டு மற்றும் உச்ச நீதிமன்ற தொகையை அதிகரிக்கவே யாப்பு திருத்தம் தேவை. சில யாப்பு திருத்தம் தேவை என்று கூறி தமது நிர்வாணத்தை மறைக்க முயல்கிறார்கள். டிரயல் அட்பார் அமைக்க பிரதம நீதியரசரின் அனுமதி தேவை.

சகல வழக்குகளையும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாகவே முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதால் வழக்குகளை துரிதமாக முன்னெடுப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சாதாரண முறைப்படி வழக்கு விசாரித்தால் 2020 ஆனாலும் விசாரணைகள் முடிவடையாது. ஒரு வழக்கு விசாரிக்க 10 வருடங்களும் 2 மாதங்கள் தேவைப்படுகிறது.நாம் யோசனை தெரிவித்துள்ள முறையின் கீழ் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் நடந்த மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து நிறைவு செய்ய முடியும் . இதற்கு அமைச்சரவையில் உடன்பாடு ஏற்பட்டது.யாப்பை காரணம் காட்டி நீதிமன்றம் அமைப்பதை பின்போட முடியாது.

ஓகஸ்ட் மாதத்தில் அரசியலில் பல திருப்பங்கள் நடைபெறும் என நான் கூறியது உண்மையாகி வருகிறது. இனி பல திருப்பங்களை காணலாம் என்றார்.