புதன், ஆகஸ்ட் 23, 2017

கலைஞர் நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார்; மீண்டும் உரையாற்றுவார்: வைகோ பேட்டிதிமுக தலைவர் கலைஞரை கோபாலபுரம் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.   திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வைகோவை வாசலில் நின்று வரவேற்றனர்.

கலைஞருடனான சந்திப்பிற்கு பின்னர் கோபாலபுரம் வீட்டின் வெளியே குவிந்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  ‘’ 53 ஆண்டுகளுக்கு முன் கோபாலபுரம் வீட்டில் கலைஞரை சந்திக்க முதன் முதலாக வந்தேன். என் மனதின் அடி ஆழத்தில் கலைஞர் இருக்கிறார்.   என்னுடைய உழைப்பு, பேச்சு அனைத்தையும் ஊக்குவித்தார் கலைஞர்.  என்னை அரசியலில் வார்ப்பித்தவர் அவர். என்னை வளர்த்தவர் அவர்.  அந்த நன்றியை நான் மறக்கவில்லை. 

83ல் தலைவர் கலைஞருக்காக தொண்டர் படையை உருவாக்கினேன்.  அதன்பின்பு நெல்லை வந்து சென்று திரும்பிய பின்னர், நெஞ்சினிக்கும் நெல்லை, என் ஆருயிர் தம்பி வைகோ என்று எழுதினார்.

என்னை முதன் முதலாக  வைகோ என்று கூறியவர் ஆருயிர் அண்ணன் கலைஞர்தான்.  வைகோ என்று  அதற்கு முன்பு யாரும் சொன்னதில்லை.  29 ஆண்டுகளும் அவருக்கு பக்கத்தில் இருந்தேன். நான் ஈழத்திற்கு சென்று திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ‘ என் தம்பியை பறிகொடுத்துவிட்டு தவித்துக்கொண்டிருக்கிறேன்’ என்று கூட்டத்தில் பேசினார் கலைஞர். 

இப்படி எத்தனையோ சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.  99-ல் அண்ணன் முரசொலி மாறன் சொல்லி நான் இந்த வீட்டிற்கு வந்தபோது, ’தனிக்குடித்தனம் போன மகன் தந்தையை பார்த்துவிட்டு போக வந்தேன்’ என்று சொல்லிவிட்டு போனேன்.  அவருக்கு உடல்நலம் இல்லை என்றபோது நான் மன வேதனை அடைந்தேன். 

66-ல் தமிழ்நாட்டிலேயே தேர்தல் நிதி அதிகமாக கொடுத்தவர் திருப்பூர் துரைசாமி.  அப்போது கலைஞர் அவரை பெரிய அளவில் பாராட்டினார்.  இப்போது நாங்கள் கோபாலபுரம் வீட்ட்ன் உள்ளே சென்றபோது அண்ணன் துரைசாமியை அடையாளம் கண்டுகொண்டார்.  புன்முறுவல் காட்டினார்.  என்னைப்பார்த்து என் கையை பற்றிக்கொண்டார்.  என்னால் அழுகையை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.  நான் கண்ணீர் விட்டேன். அண்ணன் கலைஞரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.  கடந்த 2 மாத காலமாக என் கனவிலே அண்ணன் கலைஞர் வருகிறார்.  எனக்கே ஒன்றும் புரியவேயில்லை. அவர் கையை விடவேயில்லை.  பேச முயற்சித்தார்.  அந்த குழாய் பொருத்தப்பட்டிருந்ததால் பேச முடியவில்லை.  அண்ணி தயாளுஅம்மாள், ’வந்திருப்பது யார் தெரிகிறதா?’ என்று கேட்டார்.  அதற்கு கலைஞர், ‘வைகோ’ என்றார்.  ’நான் போய்விட்டு திரும்ப வருகிறேன்’ என்றேன்.  நன்றாக சிரித்தார்.  துரைசாமி அண்ணனையும் பார்த்து சிரித்தார்.  அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.   அந்த பார்வையில் ஆயிரம் விளக்கங்கள் இருக்கின்றன.   அந்த கண்ணீர் துளியில் ஆயிரம் செய்திகள் இருக்கின்றன.  கலைஞர் முழுமையான நலம் பெறுவார். மீண்டும் பேசுவார். நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார்.   நிச்சயம் உரையாற்றுவார்.  அந்த காந்தக்குரல்; திராவிட இயக்கத்தின் மணியோசைக்குரல் மீண்டும் ஒலிக்கும்.  

முரசொலி பவள விழா மாநாட்டிற்கு நான் வரவேண்டும் என்று அன்புச்சகோதரர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.  நான் வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.  அதை துரைமுருகனும், ஸ்டாலினும் கலைஞரின் காதருகே சென்று, ‘வைகோ முரசொலி பவளவிழா மாநாட்டிற்கு வரப்போகிறார்;பேசப்போகிறார்’ என்று கூறியதும், மீண்டும் புன்முறுவல் பூத்தார்.   

கலைஞர் என்னிடம் காட்டிய அந்த நெகிழ்ச்சியால் மன நெகிழ்வோடும், இயற்கை தாயே! கலைஞர் நலம்பெற்று மீண்டும் உரையாற்றுவார். அந்த நம்பிக்கையோடு நான் விடைபெறுகிறேன்.  முரசொலி பவளவிழாவில் நான் கலந்துகொள்வேன்’’ என்று கூறினார்.