செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

தினகரன் படத்தை பார்த்து அரைமணி நேரம் சிரிக்கும் போராட்டம்!



கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி,பி.முட்லூர் ஆகிய இடங்களில் அதிமுகவினர் தினகரனை உலக மாகா ஜோக்கர் என சித்தரித்து அவரது படத்தை பார்த்து சிரிக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். 

கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடலூர் தொகுதி எம்பியுமான அருண்மொழித்தேவன் தலைமையில்  எம்எல்ஏக்கள் சிதம்பரம் பாண்டியன், காட்டு மன்னார்கோவில் முருகுமாறன், பண்ருட்டி சத்யாபன்னீர் செல்வம், விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியை தீவிரமாக ஆதரித்து வந்தனர். ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்த பிறகும் அவர்கள் அந்த அணியை தீவிரமாக ஆதரித்து வந்தனர்.

 இந்த நிலையில் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் தினகரன் அணிக்கு தாவினார். இதனையொடுத்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அருண்மொழிதேவன் எம்பி, மாவட்ட துணை செயலாளர் முருகுமாறன் எம்எல்ஏ ஆகியோரை தினகரன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினார். இதனை  கண்டித்து தினகரனை உலக மாகா ஜோக்கர் என சித்தரித்து அவரது படத்தை பார்த்து சிரிக்கும் நூதன போராட்டம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, பி. முட்லூர் ஆகிய இடங்களில்  நடந்தது. சிதம்பரம் காந்தி சிலை அருகே பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் தினகரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனகூறி அவரது படத்தை பார்த்து சிரித்து ஏளனம் செய்யும் போராட்டம் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து தினகரன் படத்தை பார்த்து சுமார் அரைமணி நேரம் சிரித்துக் கொண்டிருந்தனர்.  


காட்டுமன்னார்கோவில்  பேருந்து நிலையத்தில் நகர செயலாளர் எம்ஜிஆர் தாசன் தலைமையில் தினகரன் டிஜிட்டல் பேனரில் உலக மகா ஜோக்கர் என எழுதி வைத்து, அவரது படத்தை பார்த்து  அதிமுகவினர் சிரித்து, சிரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போல புவனகிரி, பி. முட்லூரிலும் அதிமுகவினர் சிரிக்கும் நூதன போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்று கட்சி நிர்வாகிகள் கட்டளையிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடதக்கதாகும். 

அந்தந்த பகுதியில் சிரித்து, சிரித்து நூதன முறையில் போராட்டம் நடப்பதை பார்த்த பொதுமக்களும் , அதிமுகவின் கட்சியின் நிலையையும், அரசின் நிலையையும் நினைத்து சிரித்து கொண்டே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தினகரனுக்கு கட்சியில் யாரையும் நீக்கும் அதிகாரம் இல்லை. மனநலம் பாதித்தவர் போல அவர் கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகிறார்.எங்கள் மேற்கு மாவட்ட செயலாளரையும் நீக்கியுள்ளார். கட்சியில் அதிகாரம் இல்லாத ஒருவர்  கட்சி நிர்வாகிகளை நீக்கி வருவது எங்களுக்கு சிரிப்பை வரவழைத்துள்ளது. 

பொதுமக்களுக்கும் இது தெரியட்டும் என்கிற நோக்கில் தான் சிரிப்பு போராட்டத்தை நடந்தினோம் என்றார் சிதம்பரம் நகர அதிமுக செயலாளர் செந்தில்குமார்.  கட்சிக்கு உழைக்காத தினகரன் கட்சிக்காக  அடிமட்டத்தில் இருந்து உழைத்து பொறுப்புக்கு வந்தவர்களை நீக்கம் செய்து வருகிறார். இது அரசியல் விமர்சகர்கள், நடுநிலையாளர்கள் சிரிக்கும் வகையில் உள்ளது. இந்த கேளிக்கூத்தை அவருக்கு உணர்த்தும் வகையிலும், பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் சிரித்து, சிரித்து இந்த போராட்டத்தை நடத்துதினோம் என்றார் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி 1 வார்டு அதிமுக செயலாளர் வாசுமுருகையன். காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மாவட்ட மகளிரணி இணை செயலாளர் வனிதா ரவிச்சந்திரன் கூறுகையில்  புரட்சி தலைவர் எம்ஜியாரல் ஆரம்பிக்கப்பட்ட  இந்த கட்சியை ராணுவ கட்டுப்பாடுடன்  ஜெயலலிதா  காத்துவந்தார்.  கட்சிக்காக உழைக்காத தினகரன் கட்சி நிர்வாகிகளை நீக்குவது வேடிக்கையாகவும், சிரிப்பாகவும் உள்ளது. அவர் பைத்தியம் பிடித்தவர் போல செயல்பட்டு வருகிறார். இது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சிரித்து, சிரித்து போராட்டம் நடித்தினோம் என்றார்.