வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

கட்சிகளுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார் வடக்கு முதல்வர்! - ரெலோ பிரமுகர் விசனம்

வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக, கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும், ரெலோவின் முக்கிய பிரமுகருமான பிரசன்னா இந்திரகுமார் விசனம் வெளியிட்டுள்ளார்.
வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதாக, கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும், ரெலோவின் முக்கிய பிரமுகருமான பிரசன்னா இந்திரகுமார் விசனம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு - கரடியனாறில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் முடிவடையவிருக்கும் இவ்வேளையில், அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபை போன்று முதலமைச்சர் பதவிக்கு பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கருத்து ஒரு சாரார் மத்தியில் நிலவுகின்றது. வட மாகாண சபை முதலமைச்சரின் தன்னிச்சையான போக்குகளை பார்க்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியொன்றை சாராத ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது சாத்தியப்படாத விடயம். இதில் அனுபவ ரீதியான பாடத்தைத் தான் தற்போது கற்றுக் கொண்டிருக்கின்றோம்.

ஏற்கனவே வட மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளுக்கிடையே முரண்பாடு தோன்றியது. இருப்பினும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட வேளை இலங்கை தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அவருக்கு பக்க பலமாக இருந்தன. வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் பொது வேட்பாளராக இருந்தாலும் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட அவரை இந்த பதவிக்கு கொண்டு வந்தது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தான் என்பதை எவரும் மறந்து விட முடியாது.

விருப்புத் தெரிவு வாக்குகளில் அவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் பதவிக்கு வந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் அதில் அங்கம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களையும் உதாசீனம் செய்யும் வகையில் தன்னிச்சையாகவே அவர் நடந்து கொள்கின்றார். வட மாகாண சபை அமைச்சர்கள் பதவி விலகல் தொடக்கம் புதியவர்கள் நியமனம் வரை அவர் தன்னிச்சையாகவே முடிவுகளை எடுத்திருக்கின்றார்.

இலங்கை தமிழரசு கட்சியினால் முன் வைக்கப்பட்ட பெயரை நிராகரித்து தான் விரும்பிய ஒருவரை அக் கட்சி சார்பாக நியமித்துள்ளார். அது போன்று நான் சார்ந்த கட்சியான ரெலோவினால் முன்வைக்கப்பட்ட விந்தன் கனகரத்தினத்தை நியமிக்காமல் அக் கட்சியை சேர்ந்த குணசீலனை நியமித்துள்ளார். இதனால் நான் சார்ந்த கட்சிக்கு உள்ளேயே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளார். அமைச்சு பதவிகள் தொடர்பாக கல்வி மற்றும் தொழில் சார் தகமைகள் உள்ளிட்ட விபரங்களை அவர் கோரியிருந்தார். இந்த செயற்பாடானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களால் தெரிவான பிரதிநிதிகளை உதாசீனப்படுத்துவதாகும் என குறிப்பிட்டுள்ளார்.