புதன், ஆகஸ்ட் 23, 2017

ஜெயலலிதாவைப் போல முடிவெடுக்கிறார் திவாகரன்!' - ரிசார்ட்டிலிருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ பேட்டி

அ.தி.மு.க-வில் பரபரப்பான சூழ்நிலை நிலவினாலும் ஜெயலலிதாவைப் போல திவாகரன் முடிவெடுக்கிறார்
. கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தினகரன் செயல்படுகிறார் என்று ஏழுமலை எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில்,  தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள். ஆட்சிக்கு எதிரான அடுத்தகட்ட ஆலோசனையில் இருக்கிறது சசிகலா குடும்பம். இன்னும் சில எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் வருவார்கள் என முதல்வர் தரப்புக்கு எச்சரிக்கையும் விடுக்கின்றனர். 'பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுத்ததை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கட்சி அழிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தினகரனுடன் அணி சேர்ந்திருக்கிறோம்'  என்கின்றனர், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் மனநிலையை அறிய, பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலையிடம் பேசினோம். 
தினகரனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் என்கிறார்களே? தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்து மக்களுக்காகக் கட்சியைத் தொடங்கியவர் எம்.ஜி.ஆர். அவரது மறைவுக்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி, ஆறு முறை முதல்வராக இருந்தார் ஜெயலலிதா. அவர் மறைவுக்குப் பிறகு சசிகலாவை, பொதுச் செயலாளராக்கியதில் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் முக்கியப் பங்குண்டு. பதவி பறிபோனவுடன் 'ஆட்சியையும் கட்சியையும் கலைக்க வேண்டும்' என்று சென்றவர்தான் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு, தற்போது கட்சிப் பொறுப்பு மற்றும் முக்கியமான துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் சென்றவர்களால் அ.தி.மு.க. அழிந்துவிடும் என்ற சூழ்நிலை உருவானது. அப்போது, சசிகலாதான் அனைவரையும் அரவணைத்துச்சென்று கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றினார். சசிகலாவால்தான் முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா சொன்னதால்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க 122 எம்.எல்.ஏ-க்களும் ஆதரவு கொடுத்தோம். ஆட்சிமீது அதிருப்தி ஏற்படாமலிருக்க, மக்கள் பணிகளை அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் செய்துவருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது துரோகம். அவருக்கு பதவி கொடுக்கும் முன், எங்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அதுதான் எங்களுக்குக் கோபம். துணைப் பொதுச் செயலாளர் தினகரன் சொல்வதைக் கேட்போம்.  ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணம் தினகரனுக்கு இல்லை. கட்சியை வளர்க்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவருக்கு இருக்கிறது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம்.  
 முதல்வர் பதவிக்கு சபாநாயகர் தனபாலை முன்னிறுத்துகிறாரோ திவாகரன்? 
ஜெயலலிதாவைப் போலவே திவாகரன் முடிவு எடுத்துள்ளார். அந்த முடிவை தினகரனும் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று தினகரன் சொன்னால், அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் 
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க முடியுமா?சசிகலாவை பதவியிலிருந்து நீக்குவதை அ.தி.மு.க தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். பொதுக்குழுவைக் கூட்டினால்கூட சசிகலாவுக்கு எதிராக யாரும் வாக்களிக்க மாட்டார்கள். குறுக்கு வழியில் சசிகலாவை நீக்க முயன்றால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.