செவ்வாய், ஆகஸ்ட் 22, 2017

வித்தியா கொலை வழக்கு: லலித் ஜயசிங்கவின் மறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட
பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்தது.
ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட லலித் ஜயசிங்கவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.ரியால் உத்தரவிட்டார்.
வித்தியா கொலை வழக்கு தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி விசாரணைகளுக்கென அழைக்கப்பட்டிருந்த லலித் ஜயசிங்க அன்றே குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் 209 ஆவது பிரிவின் கீழ், பிரதான சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தமை, சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவினார் என அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
அதேவேளை வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இன்று நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டுவரும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜன், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்திலிருந்து பாதுகாப்புக் கமராப் பதிவுகளைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.
வழக்குடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைவரிடமும் இருந்து எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
புங்குடுதீவு மாணவி 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பான விசாரணை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெறுகின்றது.