வியாழன், ஆகஸ்ட் 24, 2017

சாமியார் மீதான பாலியல் வழக்கில் தீர்ப்பு ; பதற்றத்தில் பஞ்சாப், ஹரியானா!

கும்ரீத்சிங் பாலியல் வழக்குத் தீர்ப்பு
சாமியார் கும்ரீத் ராம் ரஹிம்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், நாளை தீர்ப்பளிக்கப்படும்
நிலையில், 35 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, கிரிக்கெட் மைதானத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில், பஞ்சகுலா  நகரத்தில் 'தேரா சச்சா சவுதா' அமைப்பு செயல்பட்டுவருகிறது. இதன்  தலைவரான கும்ரீத் ரஹிம்சிங் மீது 2002-ம் ஆண்டு, பாலியல் வழக்குப் பதிவுசெய்ய பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது.  50 வயது கும்ரீத், தன் சிஷ்யைகளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது. 
நாளை, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் சாமியாருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். தீர்ப்பையொட்டி  தேரா சச்சா சவுதா அமைப்பைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் பஞ்சகுலா நகரில் முகாமிட்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்திவருகின்றனர். தேரா சச்சா சவுதா அமைப்பைச் சேர்ந்த 35 ஆயிரம் பேரை போலீஸார் கைதுசெய்து, சண்டிகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தங்க வைத்துள்ளனர்.  சண்டிகர் நகரில், அதிவிரைவு அதிரடிப்படை((RAF)  மத்திய ரிசர்வ் போலீஸ்  (CRPF)  இந்தோ திபெத்தியன் போலீஸ் (ITBP) மத்திய தொழில்நிறுவன பாதுகாப்புப் படை வீரர்கள் (CISF)  6 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் உயர் அதிகாரிகளும் முகாமிட்டு, நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர். சாமியாரின் ஆசிரமத்தைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.