செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

ஆறு மாணவர்களின் மரணம் - வடக்கு கல்வி அமைச்சர் இரங்கல்

உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த ஆறு மாணவர்கள் நேற்று மண்டைதீவு கடலில் மூழ்கி பரிதாபமாக மரணித்த செய்தி அதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கின்றது என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த ஆறு மாணவர்கள் நேற்று மண்டைதீவு கடலில் மூழ்கி பரிதாபமாக மரணித்த செய்தி அதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கின்றது என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள், புகையிரதக் கடவை விபத்துக்களைத் தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பாதுகாப்பற்ற படகுப் பயணத்தின் மூலம் ஆறு மாணவர்களை நாம் இழந்துள்ளது என்பது மேலும் வேதனையைத் தருகின்ற சம்பவமாகும். எமது சமுதாயம் பொதுவாக மக்கள் தொகையில் வீழ்ச்சி அடைந்து கொண்டுவரும் வேளையில் கல்வித் தரத்தை மேம்படுத்தி எமது பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம், அதனை நோக்கியே எமது திட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வேளையில், கல்வியில் உயர் தரத்தில் உள்ள, சமுகத்திற்குப் பலம் சேர்க்க வேண்டிய இந்த ஆறு மாணவர்களின் இழப்பும் ஜீரணிக்க முடியாததாகும். இந்த உயிரிழப்புக்கள் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கு மட்டுமன்றி தமிழ் சமுகத்திற்கும் பேரிழப்பாகும். இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் அலட்சிய மனோபாவமும் இவ்வாறான இழப்புக்களுக்கு ஒரு காரணமாகும். எதிர் காலத்தில் இத்தகைய இழப்புக்கள் எதுவும் நடைபெறா வண்ணம் பெற்றோர், பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் வழிகாட்டி வளர்க்க வேண்டும் என்ற பணிவான வேண்டுகோளை இவ்வேளையில் விடுப்பதுடன் பாதுகாப்பற்ற இத்தகைய நிகழ்வுகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் இளைஞர்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தமது பிள்ளைகளின் இன்னுயிர்களை இழந்து வாடும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், நல்ல மாணவர்களை, நண்பர்களை இழந்துவாடும் பாடசாலைச் சமுகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவை போன்ற துயரமான சம்பவங்கள் இனிமேலும் நிகழாதிருக்க மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன், அத்தோடு குறித்த ஆறு இளைஞர்களினதும் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.