புதன், ஆகஸ்ட் 30, 2017

எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கருத முடியாது என ஆளுநர் கூறினார்: திருமா பேட்டி

ஆளுநர் வித்தியாசாகர் ராவை இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஜவாஹிருல்லா ஆகியோர் சந்தித்தனர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.ரா, எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டார். பெரும்பான்மையை நிருபிக்க எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறினோம் என்றார்.

திருமாவளவன் பேசுகையில், அதற்கு 19 பேரும் அதிமுகவில் நீடிப்பதால் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கருத முடியாது. அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். 19 பேரும் அதிமுகவில் இருந்து விலகினால் மட்டுமே பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கருத முடியும். தற்போதைய நிலையில் எதுவும் செய்ய முடியாது என்று ஆளுநர் கூறியுள்ளார் என்றார். 

முத்தரசன், தமிழகத்தில் ஏற்பட்ட நிலை பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் ஏற்பட்டிருந்தால் அங்குள்ள ஆளுநர்கள் என்ன செய்வார்கள் என்பது உங்களுக்கு தெரியும். பிளவுப்பட்டுள்ள அதிமுகவில் பாஜக தலையீடு இருப்பது அனைவரும் அறிந்ததுதான். நிரந்தர ஆளுநர் வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது என்றார்.