சனி, செப்டம்பர் 09, 2017

18 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் கண்டிப்பான உத்தரவு!

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்

18 பேரும், வரும் 14-ம் தேதி, கட்டாயம் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்' என்று சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தலைமையைப் பிடிக்காமல் அ.தி.மு.க-விலிருந்து விலகி, போட்டி அணியை உருவாக்கினார் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார். இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி, தினகரனை டெல்லி காவல்துறையினர் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இந்தச் சூழ்நிலையில், தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பதாக முதல்வர் பழனிசாமி அணியினர் அறிவித்தனர். "கட்சியின் நலனுக்காக ஒதுங்கியிருக்கிறேன்" என்று தினகரன் கூறினார். ஒரு மாத சிறைக்குப் பின்னர் ஜாமீனில் வெளியேறி வந்த தினகரன், கட்சிப் பணியைத் தொடரப்போவதாகத் தெரிவித்தார். இது, பழனிசாமி அணியை அதிரவைத்தது.
இதனிடையே, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முதல்வர் பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்தது. இதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது எனவும் அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனமும் செல்லாது என்றும் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரும், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர்.
இந்த நிலையில், 19 பேரின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க வேண்டும் என்று அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, "கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உங்கள்மீது ஏன்  நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்பதற்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர். இதற்கு 19 பேரும் விளக்கம் அளித்தனர்.  அதை நிராகரித்தார் சபாநாயகர் தனபால். இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான ஜக்கையன், திடீரென சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதல்வர் பழனிசாமிக்குதான் எனது ஆதரவு என்று அதிரவைத்தார்.
இந்த நிலையில், ஜக்கையனைத் தவிர்த்து, தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உட்பட 18 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், வரும் 14-ம் தேதி, கட்டாயம் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், கர்நாடக மாநிலம் மைசூருக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை ஜக்கையன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிகிறது.