சனி, செப்டம்பர் 02, 2017

19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் தனித்தனியாக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், ஏழுமலை ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சட்டசபை செயலரை சந்தித்து விளக்கம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் மீண்டும் 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அளித்த விளக்கத்தை இடைக்கால பதிலாகவே கருதப்படும் எனக் கூறியுள்ளார்.