வியாழன், செப்டம்பர் 07, 2017

டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி... மீண்டும் அசத்திய கோலி!

விராட் கோலி


இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியை விளையாடியது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்த நிலையில், இன்று 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இதிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 
ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை முழுவதுமாக வென்றுவிட்ட நிலையில் இன்று கொழும்பில் இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியில் இந்தியா விளையாடியது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, முதலில் பந்துவீச முடிவுசெய்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்கவீரர் கேப்டன் தரங்கா 5 ரன்னில் வெளியெற, அடுத்து வந்த முனவீரா அதிரடியாக விளையாடினார். அவர் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இலங்கையின் நடுவரிசையை சஹால் சொற்ப ரன்களில் வெளியேற்ற, அந்த அணி மீண்டும் திணறியது. எனினும் இறுதியில் அதிரடியாக ஆடியதால் 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்தது இலங்கை. இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய அஷான் பிரியஞ்சன் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2  விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து, வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் ஷர்மா, 9 ரன்களில் வெளியேற லோகேஷ் ராகுல் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய கேப்டன் கோலி, 54 பந்துகளுக்கு 82 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். அதன்பிறகு வந்த மனிஷ் பாண்டே அரை சதம் விளாசினார். இதையடுத்து, இந்திய அணி 19.2 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்தது.  இந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான மொத்த தொடரையே ஒயிட் வாஷ் செய்த பெருமையை இந்தியா பெறுகிறது.