திங்கள், செப்டம்பர் 11, 2017

நெய்மார் முதல் டெம்பல்லே வரை... இவ்ளோ விலைக்கு இவர்கள் வொர்த்தா?

ஒவ்வொரு வருடமும் கால்பந்து உலகில் போட்டிகளே இல்லாவிட்டாலும், பரபரப்பாக இருக்கும் மாதங்களில் ஆகஸ்ட் மாதமும் ஒன்று. காரணம், சம்மர் டிரான்ஸ்ஃபர். அதாவது அடுத்த சீஸனுக்காக புதிய வீரர்களைக் கால்பந்து க்ளப்புகள் ஒப்பந்தம் செய்ய, அந்த மாதம்தான் கடைசி. சீஸன் முடிந்தவுடன் ஜூலை மாதத்தின் தொடக்கத்திலிருந்தே டிரான்ஸ்ஃபர் நடைபெறும் என்றாலும், ஆகஸ்ட் மாதத்தில்தான் புதிய ஒப்பந்தங்கள் வெகுஜோராக நடைபெறும். ஏனெனில், ஐரோப்பாவில் செப்டம்பர் 1 வரைதான் சம்மர் டிரான்ஸ்ஃபர் விண்டோ உயிர்ப்புடன் இருக்கும். (இதேபோல் வருடம்தோறும் ஜனவரி மாதமும் டிரான்ஸ்ஃபர்கள் நடைபெறும். அதற்கு `வின்டர் டிரான்ஸ்ஃபர்' என்று பெயர்).

இந்த சீஸனுக்காக சம்மர் டிரான்ஸ்ஃபர்களில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் விவரம்:

அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரர்கள்!

நெய்மார் - 222 மில்லியன் யூரோக்கள்!

பிரேசில் சூப்பர் ஸ்டாரும், லியோனல் மெஸ்சி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டாவுக்கு அடுத்த தலைசிறந்த வீரருமான நெய்மார், ஸ்பெயின் நாட்டு க்ளப்பான பார்சிலோனா அணியிலிருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியால், 222 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கப்பட்டார். நாடு பேதமின்றி பெரும்பாலான கால்பந்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும் இளம் வீரர் நெய்மா். இந்த வருடம் இவருக்கு அடித்த அதிர்ஷ்டம் அளப்பரியது. `கால்பந்து உலகின் செல்வாக்குமிக்க மனிதர்' என்ற பெருமையை, சென்ற வருடம் 105 மில்லியன் யூரோக்களுக்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியால் வாங்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு வீரர் பால் போக்பாவிடமிருந்து தன்வசமாக்கிவிட்டார். கடந்த வருட சாம்பியன்ஸ் லீக் காலிறுதியின் இரண்டாவது லெக்கில் சூப்பர் கம்பேக் கண்ட பார்சிலோனாவிடம் 6-1 என்ற கோல்கணக்கில் பி.எஸ்.ஜி தோல்வியைத் தழுவ நெய்மார்தான் முக்கியக் காரணம். அவர் இப்போது பி.எஸ்.ஜி க்ளப்பில்... வாட்டே!

அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரர்கள்!

பார்சிலோனாவிலிருந்து நெய்மார் விலகியதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், இது சரியா... தவறா எனச் சர்ச்சைகள் தொடர்ந்தாலும், இதுதான் கால்பந்து வரலாற்றிலேயே மிகப்பெரிய டிரான்ஸ்ஃபர்!

கைலியன் இம்பெப் - 166 மில்லியன் யூரோக்கள்!

இளம் ஸ்ட்ரைக்கர் கைலியன் இம்பெப், பிரான்ஸின் நடப்பு சாம்பியன் க்ளப்பான மொனாக்கோ அணியிலிருந்து 166 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கப்பட்டு(?) பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறார். இங்கும் துண்டைப் போட்டிருப்பதும் அதே பி.எஸ்.ஜி-தான். ஆனால், இந்த முறை அதிகாரபூர்வமாக விலை கொடுத்து வாங்கவில்லை. லோன் மூலம் கைலியனை உள்ளிழுத்திருக்கிறது பி.எஸ்.ஜி. அடுத்த டிரான்ஸ்ஃபரில் மேற்சொன்ன தொகையைக் கொடுத்து, அவரை வாங்குவதே அந்த க்ளப்பின் மாஸ்டர் ப்ளான்.

ஏனெனில், ஏற்கெனவே நெய்மாரை ஒப்பந்தம் செய்த 222 மில்லியன் யூரோக்கள் தொகைக்கே, `இந்த க்ளப்பால் எப்படி இவ்வளவு செலவழிக்க முடிகிறது, எப்படி இவ்வளவு வருமானம் வருகிறது, பி.எஸ்.ஜி சட்ட ஒழுங்குமுறைகளை மீறியிருக்கிறதா... என ஐரோப்பா கால்பந்து கூட்டமைப்பின் `நிதி கட்டுப்பாட்டுக் குழு’ விசாரிக்க வேண்டும்!' என பலவித சர்ச்சைகள் எழுந்தன. இந்த நேரத்தில் `கைலியனையும் பெரும் தொகைக்கு வாங்குவது சிக்கலாகும் என்பது, பி.எஸ்.ஜி-க்குத் தெரியாதா என்ன? அதனாலே இந்த லோன் நாடகம்!' என்கின்றனர் கால்பந்து நிபுணர்கள்.

கடந்த வருடத்தில் பி.எஸ்.ஜி-யை ஓவர்டேக் செய்து மொனாக்கோ லீக் ஒன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற கைலியனும் ஒரு காரணம். பார்சிலோனாவைப்போலவே மொனாக்கோவும் பி.எஸ்.ஜி-யின் புது வகையான பழிவாங்கல் நடவடிக்கைக்கு ஆளானது ஆச்சர்யமே. ரியல் மாட்ரிட்டுக்குத்தான் செல்லவிருக்கிறார் என வதந்திகள் உலவிய நிலையில், கைலியன் லோன் முறையில் பி.எஸ்.ஜி-யில் இணைந்தது எதிர்பாரா ஒன்றுதான். இந்த சீஸனில் நெய்மார், கைலியன் என இரண்டு இளம் வீரர்களையும் ஒப்பந்தம் செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறது பி.எஸ்.ஜி.

ஓசுமானே டெம்பல்லே - 105 மில்லியன் யூரோக்கள்!

இவரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்தான். வயது 20. இதுவரை ஜெர்மனியின் புருஸியா டோர்ட்மண்ட் அணிக்காகப் பட்டையைக் கிளப்பிவந்த பிளே மேக்கரான ஓசுமானே டெம்பல்லேவை, நெய்மாரின் மாற்றாக ஒப்பந்தம் செய்ய பார்சிலோனா அளித்த தொகை 105 மில்லியன் யூரோக்கள். பார்சிலோனாவின் முக்கிய இலக்காக இவரும், கோடின்ஹோவும் இருந்தனர். அநேகமாக இந்த இடத்தில் பிரேசிலின் பிலிப்பே கோடின்ஹோதான் வந்திருக்க வேண்டும். அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. `இன்னும் சில மணி நேரத்தில் கையொப்பமாகும்' என, பல முறை பார்சிலோனா நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டபோதும் கடைசி நேரத்தில் கை நழுவியது.

ஏற்கெனவே 40 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கப்பட்ட பிரேசில் மிட்ஃபீல்டர் பாலின்ஹோவின் வருகையும் பார்சிலோனா அணியை விமர்சனத்துக்குள்ளாக்க,தொகை அதிகம் என்றாலும் வேறு வழியின்றி டெம்பல்லேவுக்கு 105 மில்லியன் யூரோக்களை வாரி இறைத்திருக்கிறது பார்சிலோனா. நெய்மார் இல்லாமல் தடுமாறிவரும் பார்சிலோனா (ஸ்பானிஷ் சூப்பர் கப் ஃபைனல் உள்பட) அணிக்கு, இந்த இளம் வீரரால் ஒரு கம்பேக் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிறைவேறுமா என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில், வளர்ந்துவரும் வீரரான டெம்பல்லேவின் வேகமும் திறமையும் நம்பிக்கையளிக்கக்கூடியதுதான். எப்படியோ, இப்போது டெம்பல்லேதான் பார்சிலோனா வரலாற்றில் காஸ்ட்லி வீரர்.

ரோமெலு லுகாகு - 85 மில்லியன் யூரோக்கள்!

Lukaku

செல்சீ அணிக்குத்தான் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட பெல்ஜியம் நாட்டின் ஸ்ட்ரைக்கரான ரோமெலு லுகாகு, மான்செஸ்டர் யுனைடெட் அணியால் வாங்கப்பட்டது எதிர்பாராதது. கடந்த சீஸன் ப்ரீமியர் லீக்கில் எவர்டன் அணிக்காக கோல் மழை பொழிந்த லுகாகு, மான்செஸ்டர் அணியால் 85 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கப்பட்டுள்ளார். பதிலுக்கு யுனைடெட்டுக்கு கடந்த சீஸன் வரை பல வருடங்கள் கேப்டனாக இருந்த வெய்ன் ரூனி மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து எவர்டனுக்குத் திரும்பிச் சென்றது, இந்தக் கணக்கில் வராது. அது தனி டீல். வயதான வெய்ன் ரூனி காயத்தால் வெளியேறிய ஸ்லடான் இப்ராஹிமோவிச் என பிரதான ஸ்ட்ரைக்கர் இல்லாமல் தடுமாறிய மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் ஜொசே மொரினியோவுக்கு தேவைப்பட்ட ஸ்ட்ரைக்கர் பொசிஷனுக்கு சரியான ஆள் சிக்கிவிட்டது என வண்டியில் ஏற்றப்பட்ட லுகாகு, ப்ரீ சீஸனில் மெர்சல் காட்டிவருகிறார். நெய்மாருக்கு முன் வரை உலகின் காஸ்ட்லி கால்பந்து வீரராக இருந்த பால் போக்பாதான் லுகாகுவை இந்த டீலுக்குச் சம்மதிக்கவைத்தார் என்ற தகவலும் உலவுகிறது.

அல்வாரோ மொராட்டா - 80 மில்லியன் யூரோக்கள்!

அதிக விலைக்கு வாங்கப்பட்ட கால்பந்து வீரர்கள்!

கடந்த சீஸனில் ரியல் மாட்ரிட்டுக்காக அசத்திய அல்வாரோ மொராட்டா, இப்போது செல்சீ அணியில். என்னதான் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்தில் (ரியல் மாட்ரிட் அணி) ஒருவராக இருந்தாலும், சுதந்திரமான ஒரு ஸ்ட்ரைக்கராக இருக்க வேண்டும் என முடிவெடுத்து செல்சீ அணிக்கு வந்த மொராட்டாவுக்கு அளிக்கப்பட்ட தொகை 80 மில்லியன் யூரோக்கள். ஹசார்டு என்னதான் நடுகளத்தில் பட்டையைக் கிளப்பினாலும், அந்தப் பந்தை வாங்கி கோல் அடிக்க ஸ்ட்ரைக்கர் வேண்டுமே! கடந்த சீஸனில் ஆக்ரோஷம் காட்டிய டீகோ கோஸ்டா என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

செல்சீக்கு ஸ்ட்ரைக்கர் பொசினுனுக்கு ஆள் தேவைப்பட்ட நிலையில் எதிர்பார்த்த ரோமெலு லுகாகு வராமல் போன காரணத்தால், மொராட்டாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆர்சனல் க்ளப்புக்கு எதிரான முக்கியமான ஒரு போட்டியில் மொராட்டா தனக்குக் கிடைத்த பெனால்டியைத் தவறவிட, அந்த ஆட்டத்தில் செல்சீ மண்ணைக் கவ்வியது. இதற்காகே அவர் விமர்சிக்கப்பட்டாலும் `இந்த சீஸனில் குறைந்தது 20 கோல்களாவது அடிப்பேன்’ என அவர் உறுதியாகச் சொல்கிறார். ஆனாலும், அந்த இடத்துக்கு மொராட்டா தகுதியானவர்தானா என்ற கேள்வி எழாமல் இல்லை.