திங்கள், செப்டம்பர் 11, 2017

பொதுக்குழுவுக்கு தடையில்லை: அபராதத்துடன் வெற்றிவேல் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு, அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 (நாளை) நடைபெற உள்ளது. இதற்காக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

ஆனால், இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கக் கூடாது என்று அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதனிடையே, பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படுவது குறித்த அறிவிப்பு செல்லாது என்று அறிவிக்கக்கோரி, டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்எல்ஏவான வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

மனுவில், இந்த பொதுக்குழு விதிகளுக்கு புரம்பாக நடக்க இருப்பதாகவும், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது, அவருடைய அனுமதி இல்லாமல் இந்த பொதுக்குழு கூட்டப்பட்டிருப்பதாகவும் கூறி இந்த பொதுக்குழு நடத்த தடைவிதிக்க கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (11.09.2017) காலை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உங்களுக்கு பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ்கள் முறையாக அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ளலாமே மற்றும் அங்கு உங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாமே என கேள்வியெழுப்பினார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்கிற அணிக்கு பொதுக்குழு கூட்டம் நடத்த எந்தவித அதிகாரமும் இல்லை. ஏனெனில், அதிமுக என்ற கட்சி தேர்தல் கமிஷனால் தற்போது முடக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். 

குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரர் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், ஒரு வழக்கை தொடரும்போது அதனை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அதைத் தவறிவிட்டீர்கள். மேலும், மனுவில் நான்காவது எதிர்மனுதாரராக டிடிவி தினகரனை இணைத்துள்ளீர்கள். தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை எதிர்மனுதாரராக இணைக்கக்கூடாதெனக் கூறி உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது. அதேபோலவும் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், மேலும் மனுதாரர் வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.