வெள்ளி, செப்டம்பர் 08, 2017

வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் கட்டுநாயக்கவில் கைது! - கனடாவுக்கு ஆட்களை அனுப்பும் மோசடி

கனடாவுக்கு இளைஞர் ஒருவரை அனுப்புவதாக ஏமாற்றியது தொடர்பாக, வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் இருந்து திரும்பிய போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸில் இளைஞர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கத்திற்கு அறிமுகமான முகவர் ஒருவர், இளைஞர் ஒருவரை கனடாவிற்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து, பணத்தை பெற்ற பின்னர் ஏமாற்றியுள்ளார். வெளிநாடு செய்வதற்காக செலுத்த வேண்டிய பணத்தை, வவுனியா வர்த்தக சங்கத் தலைவரின் வங்கிக் கணக்கில் வைப்பிடுமாறு குறித்த இளைஞரை முகவர் கோரியுள்ளார்.

அதன் அடிப்படையில் குறித்த வங்கி கணக்கில் பணத்தை வைப்பில் இட்ட போதிலும் முகவரால் வெளிநாட்டுக்கு அனுப்பப்படாது தாம் ஏமாற்றப்பட்டதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். பணத்தை மீள பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது பயன் அளிக்காத நிலையில், கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸில் அந்த இளைஞர் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா வர்த்தச சங்கத் தலைவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிமன்றத்தால் அழைப்பாணை அனுப்பட்டிருந்தது. எனினும் அவர் முன்னிலையாக தவறிய நிலையில், இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்காவிற்கு வந்த போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.